வீண் சண்டைகளை விடுத்து மக்கள் சேவையில் இறங்குங்கள்: பிகேஆர் தலைவர்களுக்கு அன்வார் இப்ராஹிம் உத்தரவு

பிகேஆர் தலைவர்கள் மெத்தனமாக இருக்கக்கூடாது என்றும், அற்பமான சச்சரவுகளில் நேரத்தை வீணடிக்காமல் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் இன்று நினைவுறுத்தப்பட்டனர்.

இன்று கோத்தா பாருவில் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் உரையாற்றிய கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், வரவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகும் வகையில் கட்சி இயந்திரங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

“நாம் இப்போதிலிருந்தே பொதுத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். அற்பமான விஷயங்களுக்காகத் தர்க்கம் செய்வதையும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றிச் சிந்திக்க மறுப்பதையும் விடுத்து, நாம் உழைக்க வேண்டும்,” என்று அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பதவிகளுக்காகப் பிரச்சாரம் செய்யும்போது மட்டும் மிகுந்த உற்சாகத்தோடும் சத்தமாகவும் செயல்படும் கட்சித் தலைவர்கள், வெற்றி பெற்ற பிறகு தங்கள் கடமைகளைச் செய்வதிலும் கூட்டங்களில் கலந்து கொள்வதிலும் மெத்தனமாக இருப்பதை அன்வார் விமர்சித்தார்.

“யாராவது சோர்வாக உணர்ந்தால், என்னிடம் சொல்லுங்கள். தாராளமாக விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கட்சி மக்களுக்கும், அவர்களுக்காக உழைக்கப் போராட விரும்புபவர்களுக்குமானது,” என்று அவர் கூறினார்.

கிளைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், இதில் உறுப்பினர்களை அதிகரிப்பதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவதிலும் முன்னிலை வகிக்கும் கிளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அன்வார் கூறினார்.

“உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்காத அல்லது கட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்காத கிளைகளுக்கு நாங்கள் நிதி ஒதுக்கீடு வழங்க மாட்டோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இதேபோல் கடந்த திங்கட்கிழமை திரங்கானுவில் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டிலும் அன்வார் எச்சரிக்கை விடுத்திருந்தார். வலுவான கட்சி இயந்திரம், சுறுசுறுப்பான உறுப்பினர்கள் மற்றும் தொடர்ச்சியான திட்டங்களைக் கொண்டுள்ள தொகுதிகளில் மட்டுமே கட்சி போட்டியிடுவது குறித்துப் பரிசீலிக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

பலவீனமான பிரிவுகளிலிருந்து வரும் பரிந்துரைகளை, அவை எத்தகைய சிபாரிசுகளுடன் வந்தாலும் கட்சியின் தலைமைத்துவம் நிராகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

-fmt