நாட்டின் பொருளாதார நிலை அனுமதித்தால், Sumbangan Tunai Rahmah (STR) மற்றும் Sumbangan Asas Rahmah (SARA) திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அதிகரிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று நிதியமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் ஜோஹான் மஹ்மூத் மெரிக்கனுடன் கலந்துரையாடியதாக அவர் கூறினார். மேலும், எதிர்வரும் பட்ஜெட்டில் இதை பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“எனவே, இது நாம் தொடர்ந்து மேற்கொள்ளும் ஒரு முயற்சியாகும். STR மற்றும் SARA உதவிகளைப் பெறுபவர்களுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், பொருளாதாரம் அனுமதித்தால்… உதவித் தொகையை மேலும் அதிகரிக்க முடியுமா என்பது குறித்து நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்”.
“பட்ஜெட்டில், மக்களுக்கு உதவுவதற்காக ஒதுக்கீட்டை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பதை நான் ஆராய்வேன்,” என்று இன்று பேராக்கின் ஈப்போவில் மலேசிய தன்னார்வப் படைத் துறை (RELA) ஏற்பாடு செய்திருந்த மடானி கிட்டா (Madani Kita) தம்பூன் சமூக நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சின் பாதுகாப்புப் பிரிவு துணை தலைமைச் செயலாளர் அப்துல் ஹலீம் அப்துல் ரஹ்மான் மற்றும் RELA தலைமை இயக்குநர் ரோஸ்லி யாக்கூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதமரும் நிதியமைச்சருமான அன்வார், நாட்டின் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் பேரிடர் சூழ்நிலைகளுக்கு பதிலளிக்க உதவும் RELA உறுப்பினர்கள் உட்பட பாதுகாப்புப் பணியாளர்களின் நலனிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
“RELA பாதுகாப்பை பராமரிப்பதில் மட்டுமல்லாமல், மக்களுக்கு சேவை செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு நாங்கள் ரிம 3 மில்லியன் ஒதுக்கினோம், ஆனால் அது நிச்சயமாக போதுமானதாக இல்லை”.
“RELA உறுப்பினர்களின் நலனைப் பாதுகாப்பதற்காக, இந்தத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த நான் ஒப்புதல் அளித்துள்ளேன். இந்த ஆண்டு RELA-வின் நலனுக்காக ரிம 3 மில்லியன் ஒதுக்கீடு செய்கிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
























