கோலாலம்பூரில் காரின் மீது மரம் விழுந்ததால் வாகன ஓட்டி உயிரிழந்தார்.

அந்த மரம் அருகில் இருந்த மற்றொரு காரின் மீது கூட விழுந்ததாகவும், அந்த காரில் ஏழு பேர் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

நேற்று இரவு, கோலாலம்பூரின் ஜாலான் துன் ரசாக் சாலையில் மரம் விழுந்து நசுங்கிய இரண்டு கார்களில் சிக்கியிருந்தவர்களை மீட்க, மீட்புப் பணியாளர்கள் விரைந்து சென்றனர்.

மரக்கிளை விழுந்து கார் நசுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று இரவு சுமார் 10.20 மணியளவில், இங்குள்ள ஜாலான் துன் ரசாக் பகுதியில் சிங்கப்பூர் உயர் ஆணையத்திற்கு அருகில் உள்ள துவா ரெசிடென்சி முன்பாக இடம்பெற்றது.

டாங் வாங்கி காவல் நிலையத் தலைவர் சசாலி ஆடம் கூறுகையில், உயிரிழந்த நபரின் இரு கைகளிலும் காயங்களும், மார்புப் பகுதியில் உட்புற இரத்தக்கசிவும் ஏற்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

“அவர் இன்று அதிகாலை 4 மணியளவில் கோலாலம்பூர் மருத்துவமனையில் (HKL) சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

இந்தச் சம்பவத்தில் மற்றொரு வாகனமும் மரத்தால் சேதமடைந்ததாக சசாலி தெரிவித்தார். அந்த வாகனத்தில் இரண்டு மாத குழந்தை முதல் 57 வயது வரையிலான ஏழு பேர் பயணித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் தற்போது HKL மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) மேற்கொண்ட மரத்தை அகற்றும் மற்றும் வெட்டும் பணிகள் நள்ளிரவில் நிறைவடைந்ததாக அவர் தெரிவித்தார்.

போக்குவரத்து சீராக நடைபெறுவதற்காக, சம்பவத்தில் தொடர்புடைய இரு வாகனங்களும் ஜாலான் துன் ரசாக் பகுதியிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டன.