தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி கம்பியம்பேட்டையில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியின்போது நடிகர் விஜய் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த சுமார் 500 பெண்கள் உட்பட 2 ஆயிரம் பேர் நடிகர் விஜயிடம் இலவச அரிசி வாங்குவதற்காக முண்டியடித்து சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் கூட்டத்தை ஒழுங்குபடுத்த முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து மேடையில் இருந்த 5 பேருக்கு அரிசி வழங்கிய நடிகர் விஜய் அங்கிருந்து புறப்பட்டார். இந்நிலையில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பொதுமக்கள் அவரது காரை சூழ்ந்தனர்.
இதனால் அவர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். அப்போது திடீரென விஜயின் கார் கண்ணாடி மீது சிலர் சரமாரியாக கற்களை வீசினர். இதில் கண்ணாடி உடைந்தது. பின்னர் நடிகர் விஜய்யை ரசிகர்கள் பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.