கோழி மற்றும் முட்டை போன்ற முக்கிய புரத ஆதாரங்கள் மலேசியாவில் போதுமான அளவு உள்ளன. ஆனால், அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உள்ளூர் உற்பத்தியில் சவால்கள் நீடிக்கின்றன. அரிசி உற்பத்தி தேசிய தேவையில் 63% மட்டுமே பூர்த்தி செய்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிஐஎம்பி (BIMB) செக்யூரிட்டிஸ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், காய்கறி இறக்குமதியில் மலேசியா அதிகளவில் தங்கியுள்ளதாகவும், அதன் சுயசார்பு நிலை 45% மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.
“இதனால் காய்கறி விலைகள் விநியோக சங்கிலி பாதிப்புகளுக்கும், இறக்குமதி செலவு அதிகரிப்பிற்கும் எளிதில் ஆளாகின்றன” என்று அந்த நிறுவனம் கூறியதாக வட்டாரங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மலேசியா கோழி இறைச்சியில் 104.1% மற்றும் முட்டையில் 119.1% சுயசார்பு நிலையை எட்டியுள்ளதாக பிஐஎம்பி (BIMB) செக்யூரிட்டிஸ் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் ஒட்டுமொத்த உணவு உற்பத்தி அதிகரித்திருந்தாலும், அது உண்மையான சுயசார்பு நிலைக்கு இன்னும் சற்று குறைவாகவே உள்ளதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூர் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லாததால் காய்கறிகள், பழங்கள், இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் தானியங்களுக்காகத் தொடர்ந்து இறக்குமதியையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
எனவே, செலவினங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தற்காலிக நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், உலகளாவிய பொருட்களின் விலை மாற்றம் மற்றும் அந்நியச் செலாவணி விகிதம் போன்ற வெளிப்புறக் காரணிகளால் நாட்டின் உணவுப் பணவீக்கம் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே உள்ளது, என்று அது கூறியுள்ளது
-fmt
























