நன்கொடை முறைகேடுகள் மற்றும் நிதி கையாடல்களைத் தடுக்க, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் அறக்கட்டளைகள் தங்களின் நிதியைச் செலவிடும் முறையில் கடுமையான ஒழுங்குமுறைகளைக் கொண்டுவர வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
மனிதநேய அமைப்புகள், நலச் சங்கங்கள், மரண உதவி நிதிகள், அறக்கட்டளைகள் அல்லது நன்கொடை வசூலிக்கும் அமைப்புகளின் நிதிகள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“முறைகேடுகள் பரவலாகக் காணப்படுவதால், அனைத்து தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சில கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மக்கள் மசூதிகளுக்குச் சென்று பாலஸ்தீனத்திற்காக நன்கொடைகளை வசூலிக்கிறார்கள், ஆனால் அந்த உதவி அதன் இலக்கைச் சென்றடைவதில்லை. எனவே, இது எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதனை விவாதத்திற்கு எடுத்துச் செல்வேன், இதன் மூலம் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டிய கட்டாயம் ஏற்படும்,” என்று ஜொகூர் பாருவில் இன்று நடந்த ஆசிரியர் பயிற்சி நிறுவன நிகழ்ச்சியில் அவர் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. மாணவர் பேரவை சார்பில் பிரதமர் துறையிடம் நிதி உதவி கோர முடியுமா என்று மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
பாலஸ்தீனத்திற்காக என்று கூறி, முறையான சான்றிதழ்களுடன் சட்டப்பூர்வமாக நன்கொடை வசூலிக்கும் சில அமைப்புகளும் இதில் அடங்கும் என்று அன்வார் குறிப்பிட்டார்.
அவர்கள் 100 மில்லியன் ரிங்கிட் வசூலித்துவிட்டு, பாலஸ்தீனியர்களுக்காக 20 மில்லியன் ரிங்கிட் மட்டுமே செலவிடுகிறார்கள் என்றால், மீதமுள்ள 80 மில்லியன் ரிங்கிட் நிர்வாகச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுகிறார்கள்,” என்று அன்வார் கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதம், பாலஸ்தீன ஆதரவு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ஒருவர் சுமார் 4.2 மில்லியன் ரிங்கிட் நிதியைக் கையாடல் செய்ததாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (MACC) கைது செய்யப்பட்டார்.
-fmt
























