10A பெற்ற அனைத்து SPM மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன் இடங்களில் வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதியை புத்ராஜெயா (அரசாங்கம்) நிறைவேற்றவில்லை என MCA தலைவர் வீ கா சியோங் முன்வைத்த புகாரை துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ இன்று மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் அவதூறானது என்று அவர் வர்ணித்துள்ளார்.
இது குறித்து வோங் கா வோ தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“வீ கா சியோங் குறிப்பிட்ட 11 மாணவர்களின் விபரங்களை அமைச்சு ஆய்வு செய்ததில், அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே இடங்கள் வழங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களில் ஒரு மாணவருக்கு ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியான முதல் அறிவிப்பிலேயே இடம் வழங்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள 10 மாணவர்களுக்கும் ஏப்ரல் 29-ஆம் தேதி காலை சுமார் 11.01 மணியளவில் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு குறித்த அறிவிப்பு அனுப்பப்பட்டுவிட்டது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில மாணவர்கள் தங்கள் SPM தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை (recheck) செய்த பின்னரே 10A முடிவுகளைப் பெற்றதாலும், முதல் அறிவிப்பின் போது அந்தத் தரவுகள் இறுதி செய்யப்படாததாலும் இந்தச் சிக்கல் ஏற்பட்டதாக அவர் கூறினார்.
இதுபோன்ற மொத்தம் 286 மாணவர்களுக்கு, ஏப்ரல் 29 அன்று குறுஞ்செய்தி வழியாக மெட்ரிகுலேஷன் வாய்ப்பு குறித்த அறிவிப்பு அனுப்பப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.
கடந்த மே 2-ஆம் தேதி, 10A எடுத்த மாணவர்களுக்குத் தானியங்கி முறையில் மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், “புறக்கணிக்கப்பட்டதாகக்” கருதப்படும் 11 சிறந்த மாணவர்களை உடனடியாகச் சேர்த்துக் கொள்ளுமாறு வீ கா சியோங் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ஆயர் ஈத்தாம் நாடாளுமன்ற உறுப்பினரான வீ கூறுகையில், இது குறித்து மசீச இளைஞர் பிரிவுக்கு மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். ஒரு தானியங்கி முறையில் இத்தகைய தவறுகள் எவ்வாறு நடக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய அவர், இப்பிரச்சினையைச் சரிசெய்யுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், அரசாங்கம் தனது வாக்குறுதியை மீறவில்லை என்று வோங் கா வோ திட்டவட்டமாகக் கூறினார். 10A எடுத்த மாணவர்களுக்கான தானியங்கி சேர்க்கைக் கொள்கை, உறுதியளித்தபடியே செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
-fmt
























