அம்னோவுக்கே முதல்வர் பதவி என்பது இனவாதம், கெராக்கான்

‘பினாங்கை பிஎன் வெற்றிகொண்டால் முதல்வர் பதவியை அம்னோவுக்குக் கொடுக்க வேண்டும் என்று கூறுவோரை கெராக்கான் சாடியுள்ளது.

அப்படிச் சொல்பவர்கள் பினாங்கின் அரசியல் நிலவரம் அறியாதவர்கள் என்று பினாங்கு கெராக்கான் தலைவர் டெங் ஹொக் நான் கூறினார்.

அவர்கள் “உண்மை நிலை அறியாது இனவாத கோணத்தில் பேசுகிறார்கள்”என்றாரவர்.

“இன்றைய நிலையில் யார் முதலமைச்சர் ஆவது என்று பேசுவது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டுவதுபோலாகி விடும்”, என்று டெங் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“முதலில் மக்களின் ஆதரவைப் பெறுவது அவசியமாகும்.”

 உத்துசான் மலேசியாவில் அண்மையில் ‘Anwar the Renaissance Man, PAS plastik dan P Pinang milik Umno’என்ற தலைப்பில் வெளிவந்திருந்த பத்தி குறித்துப் பேசுகையில் டெங் இவ்வாறு கூறினார்.

அப்பத்தியில் உத்துசானின் சைனி ஹசான், பினாங்கைப் பிஎன் திரும்பப் பெற வேண்டுமானால் முதலமைச்சர் பதவியை அம்னோவுக்குக் கொடுப்பதாக உறுதிகூற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் தொடர்பில் எதிர்வினையாற்றிய பினாங்கு முதலமைச்சரின் அரசியல் செயலாளரும் கொம்டார் சட்டமன்ற உறுப்பினருமான இங் வை ஏய்க், அப்படிப்பட்ட ஒரு சூழலில் கெராக்கான் முதல்வர் பதவியை“வெள்ளித்தட்டில் வைத்து” அம்னோவிடமே ஒப்படைத்து விடும் என்று கிண்டலடித்தார்.

பினாங்கு முதலமைச்சர் பதவி தொடர்பில் பிஎன் கட்சிகளிடையே ஓர் உடன்பாடு உண்டென்றும் அதனால் அம்னோ அப்பதவி கேட்டுக் கோரிக்கை விடுக்காது என்றும் பினாங்கு அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான் ஏற்கனவே கூறியுள்ளார் என்று டெங் குறிப்பிட்டார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் துணைப் பிரதமர்  முகைதின் யாசினும்கூட, வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்றாரவர்.

பிஎன் ஆட்சியின்கீழ் “வளப்பமும் மேம்பாடும்” காண விரும்புவோர் அடுத்த தேர்தலில் அக்கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றும் டெங் கேட்டுக்கொண்டார்.

TAGS: