மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகம்), இங்குள்ள ரோஹிங்கியா சமூகத்திற்கு எதிராக அதிகரித்து வரும் அவதூறான மற்றும் பாகுபாடான பேச்சுகளைக் கண்டித்துள்ளது. இத்தகைய கருத்துக்கள் ஏற்கனவே பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள அகதி மக்களின் கண்ணியத்தைக் குலைப்பதுடன், மலேசியாவின் இரக்கமுள்ள விழுமியங்களுக்கும் முரணாக அமைந்துள்ளன என்று அது கூறியுள்ளது.
குறிப்பாக ஹரி ராயா ஐடிலாத்ஹா கொண்டாட்டங்களின் போது, இச்சமூகத்திற்கு எதிரான அவதூறு கருத்துக்கள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் அண்மையில் அதிகரித்துள்ளது குறித்து சுஹாகம் தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
“காசா போன்ற மோதல் வலயங்களில் பொதுமக்கள் உயிரிழப்பது குறித்து சர்வதேச சமூகம் நியாயமாகவே தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ள அதே வேளையில், மியான்மரில் பல தசாப்தங்களாக முறையான பாகுபாடு, குடியுரிமையின்மை மற்றும் கட்டாய இடப்பெயர்வு ஆகியவற்றை எதிர்கொண்டு வரும் ரோஹிங்கியாக்கள் மீதும் இதேபோன்ற கவனம் செலுத்தப்பட வேண்டும்” என்று அது இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்கு சமமாக இருக்கலாம் என்பதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் உள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை கண்டறியும் குழுக்களின் சர்வதேச கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி சுஹாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் இடையே உள்ள தெளிவான வேறுபாட்டை அது சுட்டிக்காட்டியுள்ளது. அகதிகள் பொருளாதார காரணங்களுக்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறுவதில்லை என்றும், மாறாக துன்புறுத்தல், மோதல்கள் மற்றும் கடுமையான மனித உரிமை மீறல்கள் காரணமாகவே அவர்கள் கட்டாயமாக தப்பியோடுகிறார்கள்.
பெரும்பான்மையான ரோஹிங்கியா அகதிகள் மலேசியாவிற்குத் தங்கள் விருப்பப்படி வரவில்லை, மாறாக தங்களின் தேவை மற்றும் உயிர்வாழ்விற்காகவே இங்கு வந்துள்ளனர்” என்று சுஹாகம் கூறியுள்ளது. மேலும், மறுகுடியேற்றம் அல்லது பாதுகாப்பான தாயகம் திரும்புதல் போன்ற நீண்டகால தீர்வுகள் கிடைக்கும் வரை மலேசியா பெரும்பாலும் தற்காலிக புகலிடமாகவே விளங்குகிறது என்றும் அது சேர்த்துக் குறிப்பிட்டுள்ளது.
அகதிகளைச் சுயநல வாய்ப்புகளைத் தேடும் புலம்பெயர்ந்தோராக சித்தரிப்பது, அவர்களின் உண்மை வாழ்க்கையைத் திரித்துக் காட்டுவதுடன், பகைமையையும் தவறான புரிதலையும் தூண்டும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்றும் சுஹாகம் எச்சரித்துள்ளது.
பொது பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஊடகப் பயனர்கள் உட்பட மலேசியர்கள் அனைவரும் அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோருக்கு எதிராகத் தவறான தகவல்கள், ஒரே மாதிரியான பொதுப்படையான கருத்துக்கள் மற்றும் தூண்டல் பேச்சுகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு சுஹாகம் வலியுறுத்தியுள்ளது.
கருத்துச் சுதந்திரம் என்பது பொறுப்புகளையும் உள்ளடக்கியதாகும். அதனைப் பலவீனமான நிலையில் உள்ள சமூகங்களுக்கு எதிராக வெறுப்பு, பாகுபாடு அல்லது பகைமையைத் தூண்டுவதற்கு ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றும் அது கூறியுள்ளது.
அகதிகள் மேலாண்மை தொடர்பான கொள்கை சிக்கல்களைக் கையாள்வது, அடிப்படை மனித உரிமைகள் அல்லது மனித கண்ணியத்தை சிதைக்கும் விதமாக அமைந்துவிடக் கூடாது” என்றும் சுஹாகம் கூறியுள்ளது.
ஆசியான் அமைப்பின் ஒரு அங்கத்துவ நாடு என்ற முறையிலும், இப்பிராந்தியத்தில் நீண்டகாலமாக முக்கியமான மனிதாபிமானப் பங்காற்றி வரும் ஒரு நாடு என்ற வகையிலும், மலேசியா மனிதாபிமானம், பாகுபாடின்மை மற்றும் மனித கண்ணியத்திற்கான மரியாதை ஆகிய கோட்பாடுகளைத் தொடர்ந்து நிலைநிறுத்த வேண்டும் என்று சுஹாகம் குறிப்பிட்டுள்ளது.
-fmt
























