இன்று காலை பிலிப்பைன்ஸின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சபாவின் கிழக்குக் கடற்கரையின் சில பகுதிகளுக்கு சுனாமி ஆலோசனைக் (எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது.
தவாவு, செம்பூர்ணா, குனாக் மற்றும் லகாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளில் காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை 0.4 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காலை 7.37 மணியளவில் மிண்டனாவோ அருகே ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆகப் பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்த நான்கு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் அமைதியாக இருக்குமாறும், அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றுமாறும் சபா முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அறிவுறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிலைமையைக் கையாள்வதற்காகப் பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் முடுக்கப்பட்டுள்ளதாகவும், மாநில அரசு இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தனி ஒரு அறிக்கையில், இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆர்தர் ஜோசப் குருப் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நான்கு பகுதிகளிலும் சுனாமி எச்சரிக்கை ஒலிப்பான்கள் இயக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“பொதுமக்கள், குறிப்பாக தவாவு, செம்பூர்ணா, குனாக் மற்றும் லகாட் டத்து ஆகிய கடலோரப் பகுதிகளைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் அமைதியாக இருக்குமாறும், பீதியடைய வேண்டாம் என்றும் நான் பலத்த வலியுறுத்துகிறேன்,” என்று அவர் கூறினார்.
மேலும், குடியிருப்பாளர்கள் கடற்கரைகளிலிருந்து தள்ளியிருக்குமாறும், வெளியேற்ற உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மிண்டனாவோவின் சரங்கனி மாகாணத்திற்கு மேற்கே சுமார் 24 கி.மீ தொலைவில் 35 கி.மீ ஆழத்தில் தாக்கியது. தவாவு மற்றும் செம்பூர்ணா ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் இதன் அதிர்வுகள் உணரப்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-fmt
























