காட்டில் இரண்டு வாரங்கள் சிக்கித் தவித்த மலையேற்ற பயணி ஜஸ்லிந்தா, 10 கிலோ எடை குறைந்தார்.

49 வயதான அவர் சீரான நிலையில் இருப்பதாக தபா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வான் இம்மி சலீம் கூறுகிறார்.

மலையேறுபவர் ஜஸ்லிந்தா சலுடின் இன்று தபா மருத்துவமனையில் பேராக் எக்ஸ்கோ உறுப்பினர்கள் ஏ சிவநேசன் மற்றும் அஸ்லான் ஹெல்மி ஆகியோரை சந்தித்தார்.

ஜஸ்லிந்தா சலூதின் என்ற மலையேற்றப் பயணி, பேராக் மாநிலத்தின் குனுங் பத்து பூத்தே மலையில் இரண்டு வாரங்கள் காணாமல் போனதையடுத்து, சுமார் 10 கிலோ எடையை இழந்துள்ளார்.

எனினும், தபா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் வான் இம்மி சலீம், 49 வயதான ஜஸ்லிந்தா தற்போது நிலையான உடல்நிலையில் இருப்பதாகவும், நன்றாக உணவருந்தி பேசக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

“அவரது காலில் ஏற்பட்ட காயங்களால் பிளாஸ்டர் (cast) போடப்பட்டுள்ளது. ஆனால்,  மருத்துவ சிகிச்சையால் அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை, வான் இம்மி, பேராக் மாநில நிர்வாக சபை உறுப்பினர்களான ஏ சிவநேசன் மற்றும் அஸ்லான் ஹெல்மி ஆகியோருடன் சேர்ந்து ஜஸ்லிந்தாவை மருத்துவமனையில் சந்தித்தார்.

நீண்ட காலம் காட்டில் இருந்ததன் விளைவாக ஜஸ்லிந்தாவுக்கு பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், விரைவில் வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார் என்று அவர் தெரிவித்தார்.

ஜஸ்லிந்தாவின் மனநிலை குறித்து கேட்டபோது, சிகிச்சை முழுவதும் அவர் மிகுந்த உற்சாகத்துடனும் நேர்மறை மனப்பாங்குடனும் இருந்ததாக வான் இம்மி கூறினார்.

கடந்த மே 24 அன்று குனுங் பத்து பூத்தே மலையில் காணாமல் போன ஜஸ்லிந்தா, கடந்த சனிக்கிழமை கம்போங் லுபுக் கஹாருவுக்கு அருகே ஒரு ஓராங் அஸ்லி (பூர்வகுடியினர்) கிராமவாசியால் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.

பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் சயானி சைடன் கூறுகையில், அந்த கிராமவாசி பிற்பகல் 3 மணியளவில் ஜஸ்லிந்தாவைக் கண்டுபிடித்து, ஜோகூரில் வசிக்கும் தனது மருமகனுக்கு தகவல் அளித்தார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் புகார் செய்தார்.

ஜஸ்லிந்தா, மே 23 அதிகாலை 2 மணிக்கு, மேலும் 13 மலையேற்ற வீரர்கள் மற்றும் இரண்டு வனத்துறை மலை வழிகாட்டிகளுடன் சேர்ந்து டிரான்ஸ் ஸ்பென்சர் சாப்மேன்(Trans Spencer Chapman Trek) பயணத்தைத் தொடங்கியிருந்தார்.

பயணத்தின் போது, ஜஸ்லிந்தாவும் மற்றொரு மலையேற்ற வீரரான ஹனாஃபி நெய்க்மத்துக்கும்(Hanafi Neikmad) அவர்களும் உடல்நலக் குறைவு காரணமாக ஏற்றத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பின்னர் ஜஸ்லிந்தா தனியாக உச்சியை நோக்கிச் செல்ல முயன்றபோது வழி தவறி காணாமல் போனார்.