பாதுகாப்பான ஓட்டுநர்களுக்கு காப்பீட்டு கட்டணத்தில் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி

பாதுகாப்பாக வாகனம் ஓட்டுபவர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் காப்பீட்டு பிரீமியங்களை வழங்கி ஊக்குவிக்கும் நோக்கில், அரசாங்கம் புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் இத்திட்டத்தில் பங்கேற்கும் காப்பீட்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள ‘செர்மட் மதானி’ திட்டம், ஆபத்தில்லாத வகையில் பாதுகாப்பாகச் செயல்படும் ஓட்டுநர்களுக்குக் கூடுதல் சலுகைகளை வழங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய அவர், “ஓட்டுநர்கள் சிறந்த ஓட்டுநர் பதிவுகளைக் கொண்டிருந்தால், அவர்கள் இன்னும் கூடுதலான சலுகைகளுடன் கூடிய காப்பீட்டு பிரீமியங்களைப் பெறுவதை இது உறுதி செய்யும்,” என்று கூறினார்.

MyJPJ செயலி மூலம் தங்களது வாகனக் காப்பீட்டைப் புதுப்பிக்கும் ஓட்டுநர்களின் ஓட்டுநர் பதிவு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற காரணிகளைக் கணக்கில் கொண்டு, இத்திட்டத்தில் பங்கேற்கும் காப்பீட்டு நிறுவனங்கள் அவர்களின் அபாயக் காரணியை மதிப்பிடும் என்று லோக் கூறினார்.

காப்பீட்டுப் புதுப்பித்தலுக்கு MyJPJ செயலியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் ஒரு “ஊக்கத்தொகையாக” தற்போது நடைமுறையில் உள்ள உரிமைக்கோரல் இல்லா தள்ளுபடி (NCD) முறையுடன் கூடுதலாக 10 சதவீதம் வரை தள்ளுபடியை இத்திட்டம் வழங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது, அதிகபட்ச உரிமைக்கோரல் இல்லா தள்ளுபடி (NCD) தள்ளுபடி 55 சதவீதம் ஆகும். ஒருவரிடம் சிறந்த ஓட்டுநர் பதிவு இருந்தால், அவர் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடியைப் பெறலாம். இதன் மூலம், அவர்கள் வழக்கமாகச் செலுத்தும் பிரீமியத்தில் மொத்தம் 65 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெற முடியும், என்று அவர் விளக்கினார்.

MyJPJ செயலி மூலம் மட்டுமே தங்களது காப்பீட்டைப் புதுப்பிக்கும் ஓட்டுநர்களுக்கு மட்டுமே இச்சலுகைத் திட்டம் பொருந்தும் என்பதை லோக் தெளிவுபடுத்தினார்.

JPJ ஒரு காப்பீட்டு நிறுவனம் அல்ல. வாகனக் காப்பீடு இன்னமும் இத்திட்டத்தில் பங்கேற்கும் காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தில் இதுவரை பத்து காப்பீட்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன. எனினும், இதில் இணைவது காப்பீட்டு நிறுவனங்களின் விருப்பத்திற்குரியது மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்களுக்கும் இதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.

“நாங்கள் இந்த 10 நிறுவனங்களுடன் மட்டும் இதை மட்டுப்படுத்தவில்லை. இதில் பங்கேற்க விரும்பும் எந்தவொரு காப்பீட்டு நிறுவனமும் இத்திட்டத்தில் இணைந்து, தங்களது காப்பீட்டுத் தயாரிப்புகளை MyJPJ இணையதளம் அல்லது செயலி மூலமாக விளம்பரப்படுத்தலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

MyJPJ செயலியின் பங்கை ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனச் சாலை வரி (Road Tax) சேவைகளுக்கு அப்பால் விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே இந்த முன்முயற்சி அமைந்துள்ளது என்றும் லோக் கூறினார்.

வருங்காலக் கட்டங்களில், தரவு ஒருங்கிணைப்பு மற்றும் அபாய மதிப்பீட்டு முறைகள் மேலும் விரிவடையும் போது, காப்பீட்டு பிரீமியக் கட்டணங்கள் இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

வாகன ஓட்டிகளை மதிப்பிடுவதற்கு இத்திட்டம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் மதிப்பெண் முறையைப் பயன்படுத்துகிறது; இருப்பினும், இதற்கான அளவுகோல்களும் தள்ளுபடி விகிதங்களும் அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. “செயற்கை நுண்ணறிவு ஒரு மதிப்பெண் முறை மூலம் மதிப்பீட்டைச் செய்யும், ஆனால் அந்த மதிப்பெண் முறை காப்பீட்டு நிறுவனங்களைச் சார்ந்தது,” என்று அவர் கூறினார்.

தற்போது இந்த மதிப்பீட்டிற்கு, JPJ மற்றும் காவல்துறையினரால் வழங்கப்பட்ட சம்மன்கள் கணக்கில் கொள்ளப்படுவதாகவும், இதில் பங்கேற்கும் காப்பீட்டு நிறுவனங்கள் MyJPJ செயலியின் பின்தள கணினி அமைப்பு வழியாக இந்தத் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் என்றும் லோக் தெரிவித்தார்.

 

 

 

 

-fmt