வாக்காளர் பட்டியலில் பல கோளாறுகள் அம்பலமாகும் வேளையில் வாக்காளர் பதிவு முறை கூட தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வாழும் மலேசியர்கள் அவர்களுக்கு தெரியாமாலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தாங்கள் ஒரு போதும் வாக்காளர்களாகப் பதிந்து கொள்ளவில்லை எனக் கூறும் இருவர் தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் புகார்களை மலேசியாகினியிடம் தெரிவித்தனர்.
இங் என்று மட்டும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இங் என்பவர் தமது நிலை குறித்து அறிந்து கொள்ள ஆகஸ்ட் 2ம் தேதி தேர்தல் ஆணைய (இசி) இணையத்தளத்தில் சோதனை மேற்கொண்டார்.
“சட்டவிரோதத் தொழிலாளர்கல் சில நாட்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்படுவது பற்றி இணையக் கலந்தாய்வு ஒன்றில் நான் ஒரு கட்டுரையைப் படித்தேன். அவர்கள் வாக்காளர் பதிவு நிலையை அறிந்து கொள்ள ஒர் இணைய இணைப்பையும் வழங்கியிருந்தனர். ”
“நான் வாக்காளராகப் பதிவு செய்யவே இல்லை. என்றாலும் என் ஆர்வம் காரணமாக நான் என் மை கார்டு எண்ணை அதில் சேர்த்தேன். அடுத்து வந்த தகவல் என்னை அதிர்ச்சி அடையச் செய்தது. அது நான் ‘permohonan yang sedang di proses’ ( விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது) எனத் தெரிவித்தது.
“நான் வாக்காளராக பதிவு செய்யவே இல்லை. அதனால் என் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. அதில் இருந்த பெயர், மை கார்டு எண், முகவரி எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தன,” என அவர் மின் அஞ்சல் வழி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
இங் உடனடியாக மின் அஞ்சல் வழி இசி-யிடம் புகார் செய்தார். ஒரு வாரத்தில் அதற்குப் பதில் கிடைத்தது. “அதில் 2011ம் ஆண்டு ஜுன் வாக்காளராகப் பதிந்து கொள்வதற்கு விண்ணப்பித்ததாகவும் அது பெரிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு முன்னர் பரிசீலிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.”
“சில நாட்களில் பதில் கிடைத்ததும் எனக்கு வாழ் நாளில் மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.”
மீண்டும் அவர் இசி இணையத் தளத்திற்குச் சென்று சோதனை செய்தார். “எனக்கு மீண்டும் அதிர்ச்சி. அது ‘daftar pemilih yang telah disahkan’ ( நான் இப்போது பதிவு செய்யப்பட்ட வாக்காளர்) எனக் கூறியது.
வெளிநாடுகளில் வேலை செய்யும் தமது மூன்று மலேசிய சகாக்களும் இது போன்ற நிலையில் இருப்பதாகவும் இங் கூறிக் கொண்டார்.
சின் என்று மட்டும் தன்னை அழைத்துக் கொண்ட இரண்டாவது புகார்தாரர் 1981ம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார்.
“வாக்காளர் பட்டியலில் என் பெயர் இருப்பதைக் கண்டு நான் வியப்படைந்தேன். நான் வாக்காளராகப் பதியவும் இல்லை. 30 ஆண்டுகளில் வாக்களித்ததும் இல்லை,” என அவர் மலேசியாகினிக்கு அனுப்பிய மின் அஞ்சல் கூறியுள்ளார்.
இங்-கைப் போன்று அவரும் இசியிடம் புகார் செய்துள்ளார். ஆனால் இன்னும் பதில் கிடைக்கவில்லை.
அந்தப் புகார்கள் பற்றி இசி அதிகாரி ஒருவரிடம் வினவப்பட்டது. அது பொறுப்பற்ற துணை வாக்காளர் பதிவு அதிகாரிகளுடைய வேலையாக இருக்கலாம் என அவர் சொன்னார்.
இசி-யிடம் ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதால் அத்தகையை துணை வாக்காளர் பதிவு அதிகாரிகளை அது நியமிக்கிறது.
அவர்களில் பெரும்பாலோர் அரசியல் கட்சிகளின் பேராளர்கள் ஆவர். ஒவ்வொரு மாநிலத் தொகுதியிலும் இரண்டு துணை வாக்காளர் பதிவு அதிகாரிகளை அனுப்புவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு பதிவு செய்யப்படும் ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு ரிங்கிட் கொடுக்கப்படுகிறது.
இதனிடையே அத்தகைய அதிகாரிகள் அனைவரும் வாக்காளர் பதிவு பாரங்களுடன் விண்ணப்பதாரர்களின் மை கார்டு பிரதிகளையும் அனுப்ப வேண்டும் சிலாங்கூர் தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 22ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது.