“மூலத்தன்மை மாறவில்லை” எனக் கூறப்படுவது நிபுணரைக் குழப்புகிறது

குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானுடைய குதத்திலிருந்து பஞ்சுக் குச்சிகள் மூலம் எடுக்கப்பட்ட மூன்று மாதிரிகள் 100 மணி நேரம் கழித்து சோதனை செய்யப்பட்டபோது எப்படி மூலத்தன்மை குறையாமல் இருந்தது? ஆஸ்திரேலிய மரபணு வல்லுநர் டாக்டர் பிரியான் மெக்டொனல்டை குழப்புகின்ற பிரச்னை அதுதான்.

பி7, பி8, பி9 எனக் குறிக்கப்பட்டுள்ள அந்த மூன்று மாதிரிகளும் மூலத் தன்மை மாறாமல் இருந்தன எனக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது “வரலாற்றுக்கு மாறாக” உள்ளது என அவர் வருணித்தார்.

“அந்த மாதிரிகள் மூலத்தன்மை மாறியதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை எனக் கூறப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும்,” என அவர் குறிப்பிட்டார்.

மெக்டொனல்ட் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் சாட்சியமளித்தார். 

குதப்புணர்ச்சி நிகழ்ந்ததாக கூறப்பட்ட 56 மணி நேரத்துக்குப் பின்னர் சைபுலின் குதத்திலிருந்து மூன்று மாதிரிகள் எடுக்கப்பட்டன. 2008-ம் ஆண்டு ஜுன் மாதம் 26-ம் தேதி பிற்பகல் மணி 3.01க்கும் மாலை மணி 4.30க்கும் இடையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2008ம் ஆண்டு ஜுன் மாதம் 28-ம் தேதி இரவு 9 மணிக்கும் ஜுன் 29 நள்ளிரவுக்கும் இடையில் கோலாலம்பூர் மருத்துவமனையில் நான்கு மருத்துவர்கள் சைபுலைச் சோதனை செய்தனர்.

அந்த மாதிரிகளை குளிர்சாதனம் பொருத்தப்பட்ட தமது அலுவலகத்தில் தமது மேசை டிராயரில் வைத்திருந்ததாகவும் 2008-ம் ஆண்டு ஜுன் மாதம் இரவு 7 மணிக்கு அவற்றை இரசாயன நிபுணர் டாக்டர் சியா லே ஹொங்கிடம் கொடுத்ததாகவும் புலனாய்வு அதிகாரி சூப்பரிடெண்ட ஜுட் பெளேஷியஸ் பெரெரா இதற்கு முன்னர் சாட்சியமளித்திருந்தார்.

அந்த மாதிரிகள் 20 டிகிரி செல்ஷியஸுக்குக் குறைவாக குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கப்படுவது நல்லது என 60 வயதான மெக்டொனால்ட் நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அளித்த தமது சாட்சியத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.