ஜொகூர் டிஎபி இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதை மறுக்கிறார், இராமகிருஷ்ணன்

ஜொகூர் மாநில டிஎபி இனவாதமாக நடந்து கொள்கிறது என்றும் அது இந்தியர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்று கூறுகிறார் செனட்டர் இராமகிருஷ்ணன்.

கடந்த ஜனவரி 12 இல் ஷா அலாமில் நடந்த டிஎபியின் தேசிய மாநாட்டில் ஜொகூர் டிஎபி சீனர்களுக்கு ஆதரவாகவும் இந்தியர்களுக்கு எதிராகவும் நடந்து வருகிறது என்று மூன்று உறுப்பினர்கள் கூறியிருந்தது குறித்து ஜொகூர் மாநில டிஎபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தாக இராமகிருஷ்ணன் கூறினார்.

“இக்குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை மட்டுமின்றி நடப்பனவற்றுக்கு எதிர்மாறாகவும் உள்ளன”, என்று அவர் கூறினார்.

முதலாவதாக, 2005 ஆம் ஆண்டில் பூ செங் ஹாவ் ஜொகூர் மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்னர் கட்சியில் இந்தியர்களின் எண்ணிக்கையும் அதன் கிளைகளும் அதிகரித்துள்ளன.

இரண்டாவதாக, எதிர்வரும் பொதுத்தேர்தலில் சீனர் அல்லாத பிற இனத்தவரின் வேட்பாளர் எண்ணிக்கை குறித்து மாநில டிஎபி ஆலோசனை நடத்தியுள்ளது.

2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஓர் இந்தியரும் ஒரு மலாய்க்காரர் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். வரப் போகும் தேர்தலில் 2 நாடாளுமன்ற மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளில் (அல்லது ஒன்றுக்கு மூன்று) இந்தியர்கள் போட்டியிடுவதற்கும், மலாய்க்காரர்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மூன்றாவதாக, ஜொகூரில் அனைத்து-மலேசிய கட்சி (Pan-Malaysian) எனும் அடையாளப் பெயரை உருவாக்க மாநில டிஎபி இதர மக்கள் கூட்டணி உறுப்புக் கட்சிகளை – பாஸ், பிகேஆர் – நாடியுள்ளது.

மேலும், சிறுபான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கி 2010 இல் ஜொகூர் மாநில ஆண்டுக் கூட்டத்தில் மூன்று மகளீர், மூன்று இந்தியர் மற்றும் மலாய் உறுப்பினர் ஒருவரும் மாநில டிஎபி செயற்குழுவில் நியமனம் பெற்றனர்.

“எனவே, இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு ஜொகூர் டிஎபி செவி சாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை”, என்று இராமகிருஷ்ணன் மேலும் கூறினார்.

டிஎபி இந்தியர் விவகாரங்களில் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு எடுத்துக்காட்டாக இருப்பது கங்கார் புலாய் தமிழ்ப்பள்ளி விவகாரம். அப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம் இரகசியாமாக ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு வழங்கப்பட்டதை மாநில ஆட்சிக்குழு கூட்டத்திற்கு டிஎபி கொண்டு சென்றதன் விளைவாக அந்த நிலம் மீண்டும் அப்பள்ளியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இப்பள்ளி இச்சலசலப்புக்குப் பின்னர்தான் கட்டி முடிக்கப்பட்டது. 8 ஆவது மலேசிய திட்டத்திலேயே இப்பள்ளிக்கூடம் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“ஜோகூர் மாநிலத்தில் இந்திய சமூகத்துடன் நான் பல சந்திப்புகளை நடத்தியுள்ளேன். டிஎபியின் மீது அவர்களுக்கு மதிப்பும் நம்பிக்கையும் இருக்கின்றன.

“எதிர்ப்புக் குரல் எழுப்பிய கட்சியின் அம்மூன்று உறுப்பினர்களின் செயலானது டிஎபி மற்றும் அதன் மாநில தலைமைத்துவதற்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

“டாக்டர் பூ செங் ஹாவ்வின் தலைமைத்துவம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு காரணம் அவரின் பல்லின அணுகுமுறைதான். எனவே, அவர் ஓர் இனவாதி என்ற கூற்றில் கிஞ்சிற்றும் உண்மை கிடையாது.

“உண்மையில், ஜொகூர் மாநில இந்திய சமூகத்திற்கு உதவிகள் வழங்கத் தவறியது தேசிய முன்னணிதான். டிஎபி அல்ல!

“ஏழை பாமர மக்கள், பெல்டா குடியேற்றக்காரர்கள், சிறிய வணிகர்கள் போன்ற அனைத்து தரப்பினர்களுக்கும் மாநில டிஎபி உதவி வருகிறது என்பதை டாக்டர் பூ சுட்டிக் காட்டினார்”, என்று இராமகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

TAGS: