பண்டார் உத்தாமா பள்ளியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக, குடும்பத்தினர் அரசு அமைப்புகள் மற்றும் பெற்றோருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளனர்

சிறுமியின் குடும்பத்தினர், இந்த நடவடிக்கை “பழிவாங்குவதற்காக அல்ல” என்றும், சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புக்கூறச் செய்வதற்காகவும், வேறு எந்தக் குழந்தையும் இதுபோன்ற நிலையை எதிர்கொள்ள வேண்டாம் என்பதற்காகவும் எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

யாப் குடும்பத்தினர், சிவில் வழக்கு அக்டோபர் 1ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்

பண்டார் உத்தாமா பள்ளியொன்றில் கடந்த ஆண்டு ஆண் மாணவர் ஒருவரால் குத்திப் படுகொலை செய்யப்பட்ட 16 வயது யாப் ஷிங் சுவென் (Yap Shing Xuen) என்பவரின் குடும்பத்தினர், பல அரசு முகமைகள் மற்றும் அந்தச் சிறுவனின் பெற்றோருக்கு எதிராக உரிமையியல் (சிவில்) வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

தங்கள் வழக்கறிஞர்களான ‘சுரேந்திர அனந்த் அட்வகேட்ஸ் & சொலிசிட்டர்ஸ்'(Surendra Ananth Advocates & Solicitors) வாயிலாக, அக்டோபர் 1-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இந்த உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த சட்ட நடவடிக்கை “பழிவாங்குவதற்காக அல்ல”, மாறாகச் சம்மந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்பதை உறுதி செய்வதற்கும், வேறு எந்தக் குழந்தையும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகக்கூடாது என்பதற்காகவுமே மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

“அவரது இறப்பிற்குப் பிறகு, குறிப்பாகக் குற்றவியல் விசாரணையிலிருந்து வெளிவந்த அனைத்து உண்மைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சம்மந்தப்பட்ட தரப்பினர் பொருத்தமான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அவரது கொலையைத் தடுத்திருக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பள்ளிகளில் மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போதுமான நடவடிக்கைகளை எடுக்க அரசு முகமைகள் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டிருப்பதாக வாதிட்டு, பல அரசு முகமைகளைப் பிரதிவாதிகளாகக் குடும்பத்தினர் பெயரிட்டுள்ளனர்.

“விஷயங்கள் தீவிரமடைவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் இதில் அடங்கும். அவர்கள் அதைச் செய்யத் தவறிவிட்டதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்,” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

சிறுவனின் பெற்றோரையும் பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், “எச்சரிக்கை அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தன” என்றும், தங்கள் குழந்தைகள் மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்யத் தகுந்த கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு என்றும் கூறினர்.

“நாங்கள் அந்தச் சிறுவனையும் ஒரு பிரதிவாதியாகப் பெயரிட்டுள்ளோம்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த உரிமையியல் வழக்கில் வழக்கறிஞர்கள் மாலிக் இம்தியாஸ் மற்றும் ஏ. சுரேந்திர அனந்த் ஆகியோர் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் என்று அவர்கள் கூறினர்.

செப்டம்பர் 14-ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 15 வயதுச் சிறுவன் இக்குற்றத்தைச் செய்தபோது மனநிலை சரியில்லாதவராக இருந்தார் என்று தீர்ப்பளித்த ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், அவரைக்கொலை வழக்கிலிருந்து விடுவித்தது.

இருப்பினும், நீதிபதி அத்லின் அப்துல் மஜித், அச்சிறுவனுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் வகையில் பேராக், ஹோஸ்பிட்டல் பாகியா உலு கிந்தாவில் சிலாங்கூர் சுல்தானின் விருப்பப்படி (detained at the pleasure of the sultan of Selangor) காவலில் வைக்க உத்தரவிட்டார்.

செப்டம்பர் 24 அன்று, அரசு தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (AGC) உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீட்டு அறிவிப்பைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தது

கடந்த ஆண்டு அக்டோபர் 14 அன்று காலை 9.20 மணி முதல் 9.35 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், பள்ளியின் மாணவிகள் கழிப்பறையில் படிவம் 4 (Form 4) மாணவியைக் குத்திக் கொன்றதாக அச்சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.