ஹங் துவா, ஹங் ஜெபாட் முதலிய மலாய் வீரர்கள் வாழ்ந்ததற்கு எழுத்துப்பூர்வ சான்றுகள் இல்லை என்கிறார் நிறைநிலை பேராசிரியர் கூ கே கிம்.
அதேபோல் மலாக்கா சுல்தான் மன்சூர் ஷாவின் ஐந்தாவது மனைவி என்று கூறப்படும் ஹங் லி போ இருந்ததற்கும் சான்றுகள் கிடையாது என்கிறார் அவர்.
அந்த வகையில் வரலாற்றுப் பாடங்களைத் திருத்தி எழுத வேண்டும் என்றவர் பரிந்துரைத்துள்ளார்.
கூவை மேற்கோள்காட்டி த ஸ்டார் செய்தி வெளியிட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் கற்பனைப் பாத்திரங்கள் என்றும் அவர்கள் பற்றிக் கூறப்படுவன கட்டுக்கதைகள் என்றும் கூ தெரிவித்தார்.
“எப்படியோ அக்கதைகள் வரலாற்றுப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுவிட்டன”, என்றாரவர். பேராசிரியர் கூ, வரலாற்று பாடநூல்களை ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டிருக்கும் சிறப்புக் குழுவின் உறுப்பினருமாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“என் சொந்த கருத்து என்னவென்றால், மரவுவழிக் கதைகள், செவிவழிக் கதைகள் போன்றவற்றையெல்லாம் வரலாற்றுப் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
“அப்படியே அவற்றைச் சேர்த்துக்கொள்ள விரும்பினால், குறிப்பிட்ட கதைகள் உண்மையானவை அல்ல என்பதையும் தெளிவாகக் குறிப்பிடல் வேண்டும்”, என்றவர் சொன்னார்.