புகைமூட்டத்திற்குக் காரணமான நிறுவனங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: சையத் சாதிக் வலியுறுத்தல்

எல்லை தாண்டிய புகைமூட்டத்தை ஏற்படுத்திய காட்டுத் தீயுடன் தொடர்புடைய நிறுவனங்களை மலேசியர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார். அந்த நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுக்க நுகர்வோர்கள் தங்களின் வாங்கும் சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மலேசியாவிற்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான சர்ச்சையின் போது முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமது கையாண்ட அணுகுமுறையைக் குறிப்பிட்ட சையத் சாதிக், இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்கள் அரசாங்கத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது என்றார்.

நமக்கு அதிகாரம் உள்ளது, நமது வாங்கும் சக்தி இறுதியில் இந்தோனேசிய நிறுவனங்களை கவலையடையச் செய்யும், என்று அவர் நாடாளுமன்றத்தில் விநியோக மசோதா மீதான விவாதத்தின் போது தெரிவித்தார்.

பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்படுவதற்கு காரணமான, மோசமடைந்து வரும் புகைமூட்டச் சூழலுக்கு மத்தியிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் உருவான இந்த புகைமூட்டம் காரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் காற்றின் தரம் காட்டி அபாயகரமான அளவை எட்டியதை அடுத்து, சரவாக்கின் செரியன் மாவட்டத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

மலேசியா இப் பிரச்சினை குறித்து இந்தோனேசியாவிற்கு எதிராக உறுதியான தூதரக நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும், இதர ஆசியான் நாடுகளின், குறிப்பாக சிங்கப்பூரின் ஆதரவை நாட வேண்டும் என்றும் சையத் சாதிக் வலியுறுத்தினார்.

காடுகளை எரிப்பதில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு நிதி வழங்குவதை நிறுத்துவதற்கு, இரு நாடுகளும் தங்களின் நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடியும்.

தங்கள் நாட்டின் எல்லைக்கு அப்பால் ஏற்படும் மாசுபாட்டிற்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, சிங்கப்பூரின் எல்லை தாண்டிய புகைமூட்ட மாசு சட்டத்தை போன்றதொரு சட்டத்தை மலேசியாவும் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று சையத் சாதிக் முன்மொழிந்தார்.

இந்தக் காட்டுத் தீக்கு உடந்தையாக இருப்பது கண்டறியப்படும் மலேசிய நிறுவனங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

 

-fmt