மலேசியாவிலிருந்து வரும் மருத்துவர்கள் தங்கள் மாநிலங்களில் சேவை செய்வதை ஊக்குவிப்பதற்காக, 10,000 ரிங்கிட் ஊக்கத்தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சபா மற்றும் சரவாக் அரசாங்கங்களை சுகாதார அமைச்சின் ஊழியர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களின் கூட்டுக் குழு வலியுறுத்தியுள்ளது.
சபா மற்றும் சரவாக்கில் அதிகளவிலான மருத்துவர்களை ஈர்ப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கையாக, மாநில அரசாங்கங்கள் ஒரு சிறப்பு ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பொதுச் செயலாளர்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து பொதுச் செயலாளர்களின் கூட்டுக் குழு தலைவர் அஜுலாஹின் ஜாபின் கூறுகையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மருத்துவர்கள் தங்களின் இடமாற்றச் செலவுகள் மற்றும் ஆரம்பக்கட்டச் செலவுகளைச் சமாளிக்க ஒரே முறையில் 5,000 ரிங்கிட் பெறலாம். அதைத் தொடர்ந்து, அவர்கள் மூன்று ஆண்டுகள் சேவையை நிறைவு செய்தவுடன் இரண்டாவது முறையாக மேலும் 5,000 ரிங்கிட் ஊக்கத்தொகையைப் பெறலாம்’ என்று தெரிவித்தார்.
மருத்துவர்கள் பணிக்குச் சேரும்போது, இந்த ஊக்கத்தொகையின் முதல் பகுதியை அந்தந்த மாநில அரசாங்கங்கள் வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் அவர் தனது அறிக்கையில், இந்தத் திட்டம் முக்கியமாகப் போதிய மருத்துவப் பணியாளர்களைத் திரட்டுவதில் சவால்களை எதிர்கொள்ளும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளை இலக்காகக் கொண்டதாக இருக்கும்’ என்றும் தெரிவித்தார்.
இத்தகைய ஒரு முயற்சி, அதிகமான மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களை இம்மாநிலங்களில் சேவை செய்ய ஊக்குவிக்கும் என்றும், அதே வேளையில் பொதுமக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சுகாதார அமைச்சகத்தை மட்டுமே நம்பியிருக்காமல், இந்த பற்றாக்குறையைப் போக்க மாநில அரசாங்கங்களும் உதவ தயாராக உள்ளன என்பதைக் காட்டும் என்றும் அஜுலாஹின் கூறினார்.
இருப்பினும், இந்தத் திட்டம் ஒரு நிரந்தரத் தீர்வாக இல்லாமல், ஒரு தற்காலிக நடவடிக்கையாக மட்டுமே உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களின் சுகாதாரப் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு, குறிப்பாக அவ்விரு மாநிலங்களின் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து வரும் உள்ளூர் மருத்துவப் பட்டதாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இருக்கும் பட்சத்தில், இந்தத் திட்டத்தின் அமலாக்கம் மறுபரிசீலனை செய்யப்பட்டு நிறுத்தப்படலாம் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் நிரந்தரப் பணியிடங்கள் வழங்கப்பட்ட மருத்துவ அதிகாரிகளில் 63% பேர் மட்டுமே பணிக்குச் சேர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சர் சுல்கிப்லி அகமது கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் தங்களுக்கு வழங்கப்படும் பணி நியமனங்களை ஏற்றுக்கொள்வதற்கும், அங்கேயே தொடர்ந்து நீடிப்பதற்கும் மருத்துவர்களின் முடிவுகளில் ஊதியப் பொதிகள் மற்றும் நீண்ட கால நலன்புரி உத்தரவாதங்கள் ஆகியவையும் முக்கிய காரணிகளாக அமையும் என்று அஜுலாஹின் கூறினார்.
போதுமான அடிப்படை வசதிகளும் ஆதரவும் இல்லாமல், நிதி ஊக்கத்தொகைகள் மட்டுமே இதற்குப் போதுமானதாக இருக்காது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-fmt
























