மலேசியாவின் பத்து மலைப் பகுதியில் தைப்பூசத் திருவிழாவின்போது இந்து சமயச் சடங்குகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் நபர் ஒருவரை இஸ்லாமிய சமய அதிகாரிகள் கைது செய்துள்ள விவகாரத்தில், இந்து சமூகம் தலையிடாமல் இருக்க வேண்டும் என்றும், மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய செயல்கள் அல்லது கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“வேறொரு மதத்தைச் சேர்ந்த தனிநபரின் மதக் கடமைகள் தொடர்பான சர்ச்சையில் இந்து சமூகம் சிக்கிக்கொள்வதற்கும் எந்தத் தேவையும் இல்லை; அதனால் எந்தப் பயனும் கிடையாது,” என்று மலேசிய இந்து சங்கத்தின் (MHS) தலைவர் தங்க கணேசன் தெரிவித்தார்.
மலேசியாவின் பல இன, பல மத சமூகத்தின் நல்லிணக்க உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், இந்து வழிபாட்டுத் தலங்களும் கலாசார விழாக்களும் நீண்டகாலமாகப் பல்வேறு மத மற்றும் கலாசாரப் பின்னணிகளைக் கொண்டவர்களை வரவேற்று வந்துள்ளதாக அவர் கூறினார்.
அதேவேளையில், இஸ்லாம் மலேசியாவின் கூட்டாட்சி மதமாக அரசியலமைப்பில் வகிக்கும் நிலையை மலேசிய இந்து சங்கம் அங்கீகரித்து மதிப்பதாகவும், அதே நேரத்தில் பிற மதங்களை அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் பின்பற்றுவதற்கான உரிமையையும் அங்கீகரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மத அனுஷ்டானங்கள் மலேசியாவில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் மத உணர்வுகளுக்கு உரிய மதிப்பளித்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கணேசன் (மேலே) வலியுறுத்தினார்.
“இஸ்லாமிய சமயத்தைப் பின்பற்றும் ஒருவர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், அவருடைய மதக் கடமைகள், நடத்தை அல்லது நடைமுறையில் உள்ள இஸ்லாமியச் சமயச் சட்ட விதிகளுக்கு இணங்கியுள்ளாரா என்பது தொடர்பான கேள்விகளை, சம்பந்தப்பட்ட இஸ்லாமிய சமய அதிகாரிகள் சட்டத்திற்கும் நடைமுறையில் உள்ள முறைகளுக்கும் ஏற்ப ஆராய்ந்து தீர்மானிப்பதே சிறந்தது என்று மலேசிய இந்து சங்கம் கருதுகிறது.
“எனவே, இந்து சமய அமைப்புகள், கோயில் நிர்வாகக் குழுக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட இந்து சமூகத்தினர் அனைவரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் எந்தத் தரப்புக்கும் ஆதரவாகச் செயல்படுவதையோ, ஊகங்களின் அடிப்படையில் விளக்கமளிப்பதையோ அல்லது நிலைமையைத் தேவையின்றி மோசமாக்கக்கூடிய ஆத்திரமூட்டும் கருத்துகளை வெளியிடுவதையோ தவிர்க்க வேண்டும் என்றும் மலேசிய இந்து சங்கம் கேட்டுக்கொள்கிறது.
“இத்தகைய விவகாரங்கள் உரிய அதிகாரிகளால் நியாயத்துடனும், விவேகத்துடனும், உணர்வுபூர்வமான அணுகுமுறையுடனும் கையாளப்பட வேண்டும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று, அலிஃப் டேனியல் (Aliff Daniel) என அடையாளம் காணப்பட்ட நபர், இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஒரு ‘தூய்மைப்படுத்தும்’ சடங்கில் பங்கேற்பது போல் உள்ள காணொளிகளிலும் காணப்பட்டதாகவும், அவர் தன்னை ஒரு ஆன்மீகக் குணப்படுத்துபவராகக் (spiritual healer) காட்டிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஷா ஆலம் ஷரியா நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து , அலிஃபும் அவரது 52 வயது தாயாரும் கோலாலம்பூரில் கூட்டாட்சிப் பிரதேச இஸ்லாமிய சமயத் துறையால் (ஜாவி) கைது செய்யப்பட்டனர்.
குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணையைத் தமது துறை ஆரம்பித்ததாக சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையின் (Jais) இயக்குநர் ஷாஹிசான் அஹ்மத் தெரிவித்தார்.
























