அக்டோபர் 12ஆம் தேதி இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து, அக்டோபர் 15ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மொத்தம் 1,113 புகார்கள் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
MyLapor எனும் டிஜிட்டல் தளம், புகைப்பிடிப்புப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852)-ஐ அமல்படுத்துவதற்கு உதவும் நோக்கில், அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கப்பட்டது.
புகைபிடித்தல் மற்றும் மின்னணு சிகரெட் (Vaping) பயன்படுத்துதல் தடைசெய்யப்பட்ட பகுதிகளில் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக, அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட MyLapor முறைமை மூலம் சிலாங்கூரில் மொத்தம் 358 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தகவலின்படி, கோலாலம்பூர் 210 புகார்களுடன் இரண்டாவது அதிக புகார்கள் பதிவான இடமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜொகூரில் 160 புகார்கள் பதிவாகியுள்ளன.
பெரும்பாலான புகார்கள் உணவருந்தும் பகுதிகள் தொடர்பானவையாக இருந்தன. இப்பகுதிகள் கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் தொடர்ந்து முக்கிய கவனம் செலுத்தப்படும் இடங்களாக உள்ளன.
அக்டோபர் 15ஆம் தேதி பிற்பகல் 2 மணி நிலவரப்படி, MyLapor முறைமை மூலம் மொத்தம் 1,113 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
“இவற்றில் 471 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 347 புதிய புகார்கள் பதிவாகியுள்ளன. 232 புகார்கள் விசாரணையில் உள்ளன. மேலும், 63 புகார்கள் நிறைவு செய்யப்பட்டு, அதன் தொடர்பான கருத்துகள் மற்றும் பதில்கள் வழங்கப்படும் இறுதிக்கட்டத்தில் உள்ளன,” என்று சுகாதார அமைச்சு தெரிவித்ததாக பெரிட்டா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டம் 2024 (சட்டம் 852)-இன் கீழ் குற்றங்களுக்காக 216 சம்மன்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























