மலேசிய நீதித் துறை வரலாற்றில் “முறையீட்டு வீரர்” என அன்வார் இப்ராஹிமை வருணித்த முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட், அண்மைய குதப்புணர்ச்சி வழக்கில் புகார்தாரருக்கு ஏன் அதே உரிமை வழங்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் அன்வார் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் வேளையில், முறையீடு செய்வதற்கு அன்வார் மீது குற்றம் சாட்டியவருக்கு உள்ள உரிமை குறித்து கேள்வி எழுப்பப்படுவது ஏன்?” என டாக்டர் மகாதீர் தமது வலைப்பதிவில் எழுதியுள்ளார்.
“அப்படி என்றால் எதிர்த்தரப்புத் தலைவருக்கு இந்த நாட்டில் சிறப்பு உரிமைகள் உள்ளன. அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளிக்கப்படும் போது மட்டுமே நீதி நிலை நிறுத்தப்படுகிறதா?”
“அப்படி என்றால் இந்த நாட்டில் வலிமை இல்லாத, பாதிக்கப்பட்ட ஒருவர் நீதியை நாடுவதற்கு உரிமை இல்லை. அதனால் அவர் மேல் நீதிமன்றத்துக்கு முறையீடு கூட செய்து கொள்ள முடியாதா?”
ஜனவரி 9ம் தேதி அன்வார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்யுமாறு சட்டத் துறைத் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ள முகமட் சைபுல் புஹாரி அஸ்லானையும் அவரது குடும்பத்தினரையும் எதிர்த்தரப்புத் தலைவர்கள் கண்டிப்பது குறித்து மகாதீர் கருத்துரைத்தார்.
அந்த விசாரணையின் போது அன்வாரே பல விண்ணப்பங்களைச் சமர்பித்துள்ளார். நீதிபதி அந்த வழக்கை விசாரிப்பதிலிருந்து தம்மை சுயமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பமும் அவற்றுள் அடங்கும் என மகாதீர் குறிப்பிட்டார்.
“அன்வார் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், என்னை நம்புங்கள், அவர் முறையீட்டு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்து கொண்டிருப்பார்.”
“அந்த முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்ற முடிவை நிலை நிறுத்தினால் அன்வார் கூட்டரசு நீதி மன்றத்துக்கு முறையீடு செய்து கொள்வார்.”
“அந்தத் தீர்ப்பை கூட்டரசு நீதிமன்றமும் மாற்றா விட்டால் அவர் சிறப்பு நீதிமன்றத்துக்கும் அதனை கொண்டு செல்லக் கூடும்.”