பினாங்கு அம்னோ தலைவர்கள், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தீர்மானிக்க முற்படும்போது உள்ளுக்குள் அடித்துக்கொள்வதையும் கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்க வேண்டும்.
பக்காத்தான் ரக்யாட்டிடமிருந்து கூடுதல் இடங்களைக் கைப்பற்ற விரும்பினால் இப்படிப்பட்ட செயல்களில் அறவே ஈடுபடக் கூடாது என்று உள்ளூர் மலாய் என்ஜிஓ (அரசுசாரா அமைப்பு) ஒன்று அறிவுறுத்தியுள்ளது.
அம்னோவில் உள்ள மூத்தவர்கள், தகுதியான புதுமுகங்களுக்கு இடம்விட்டு ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.அவர்களின் வாய்ப்புகளைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று பினாங்கு மலாய் காங்கிரஸ்(பிஎம்சி) கூறியது.
“இடம்விட்டு ஒதுங்க வேண்டுமே தவிர ஒருவர் மற்றவர் முதுகில் குத்தி அம்னோவுக்குள்ள நல்ல பெயரைக் கெடுக்கக்கூடாது”, என்று பிஎம்சி செயலாளர் முகம்மட் நூர் முகம்மட் அப்துல் காடிர் கூறினார். அவர் இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார்.
2008-இல் அம்னோ பக்காத்தானிடம் இழந்த நான்கு இடங்கள் 500 வாக்குகள் வேறுபாட்டில்தான் கைமாறிப் போயின என்பதை ஒரு வழக்குரைஞருமான முகம்மட் நூர் சுட்டிக்காட்டினார்.
“அம்னோ உறுப்பினர்கள் கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டதுதான் இதற்குக் காரணம்”, என்றாரவர்.
முகம்மட் நூரின் கருத்து, அம்னோ துணைத் தலைவரும் துணைப் பிரதமருமான முகைதின் யாசினின் கருத்தைத் தழுவி நிற்பதுபோலக் காணப்படுகிறது. பிஎன் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கு முன்னதாக உள்பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று முகைதின் வலியுறுத்தி இருந்தார்.
பின் கட்சிகளுக்குள் பிரச்னை நிலவுவதை அறிந்த முகைதின், கடந்த அக்டோபர் தொடங்கி பங்காளிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.
அரசியல் சூழல் இப்போது மாறிவருவதாக நம்பும் முகம்மட் நூர், மலாய்க்காரர்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்குமுன் நுணுகி ஆராய்கிறார்கள் என்றார்.
சமூக மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசைத் தேர்ந்தெடுக்கவே மக்கள் விரும்புகிறார்கள் என்று கூறிய அவர் பணத்தைக் கொடுத்து காரியம் சாதிப்பதெல்லாம் இப்போது நடக்காது என்றார்.
“இதுதான் உண்மை நிலவரம்”, என்ற முகம்மட் நூர் அம்னோ இதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார்.