உத்துசான், அன்வாரின் 50 மில்லியன் ரிங்கிட் வழக்கை பொருட்படுத்தவில்லை

திருநங்கைகள் தொடர்பாக அன்வார் இப்ராஹிமைச் சூழ்ந்துள்ள சர்ச்சையை அம்னோவுக்கு சொந்தமான உத்துசான் மலேசியா இன்று மீண்டும் பெரிதுபடுத்தியுள்ளது.

அந்த எதிர்த்தரப்புத் தலைவர் ஒரினச் சேர்க்கையை சட்டப்பூர்வமாக்க விரும்புகிறார் எனக் குற்றம் சாட்டி அந்த ஏடு ஏற்கனவே பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

தாம் ஒரினச் சேர்க்கையை ஆதரிப்பதாக காட்டும் முதல் பக்கச் செய்திகளை உத்துசான் மலேசியா மீட்டுக் கொள்ளா விட்டால் அதற்கு எதிராக 50 மில்லியன் ரிங்கிட் வழக்கைத் தொடுக்கப் போவதாக அன்வார் மருட்டியுள்ள போதிலும் அந்த ஏடு அந்தச் செய்தியை மீண்டு வெளியிட்டுள்ளது.

பிபிசி-யில் ஒளிபரப்பான அன்வாருடைய பேட்டியை சில உள்ளூர் நாளேடுகள் வெளியிட்ட பின்னர் அந்த சர்ச்சை மூண்டது. திருநங்கைகளுடைய உரிமைகளைப் பொறுத்த வரையில் அன்வார் பால் சமநிலையை எடுக்கத் தயாராக இருக்கிறாரா என அந்தப் பேட்டியில் அன்வாரிடம் வினவப்பட்டது.

அப்போது அன்வார் அளித்த பதில்: “நாம் நமது சில பழைய சட்டங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும். மலேசியாவில் உள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான திருமணம் என்ற புனிதத்தன்மையை நம்புகிறோம். அதனை ஆதரிக்கிறோம். ஆனால் நாம் தண்டிப்பவர்களாகவும் கருதப்படக் கூடாது. பழைய சட்டங்கள் இன்னும் பொருத்தமானவை என்றும் எண்ணக் கூடாது.”

அன்வாருடைய அறிக்கை இஸ்லாத்தில் ஹராம் என கருதப்படும் ஒன்றுக்கு அங்கீகாரம் அளிக்கிறார் என Himpunan Ulama Muda Malaysia (Ilmu) அமைப்பின் குழுத் தலைவர் பாதுல் பேரி மாட் ஜாஹ்யா கண்டித்ததாக உத்துசான் தனது இன்றைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

“ஒரினச் சேர்க்கை பகிரங்கமாகப் பின்பற்றப்படுவதற்கு அன்வார் அனுமதிப்பதாக அவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளன,” என பாதுல் சொன்னதாகவும் அந்த ஏடு தெரிவித்தது.

அன்வாருடைய அறிக்கை உண்மையான இஸ்லாமியக் கோட்பாடுகளிலிருந்து முஸ்லிம்கள் விலகிச் செல்வதற்கு வழி கோலி விடும் என்று Ikatan Muslimin Malaysia அமைப்பின் தலைவர் அப்துல்லா ஜாய்க் அப்துல் ரஹ்மான் கூறியதாகவும் உத்துசான் தகவல் வெளியிட்டது.