வெளிநாட்டு அஞ்சல் வாக்குகள்- மாற்றங்கள் செய்ய 2 மாதங்கள் தேவை

வெளிநாடுகளில் வாழ்கின்ற அனைத்து மலேசியர்களுக்கும் அடுத்த பொதுத் தேர்தலில் அஞ்சல் வாக்குமுறையை விரிவு செய்வதற்கான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அமலாக்க விரும்பினால் அது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் உத்தேசத் திருத்தங்களை யாங் டி பெர்துவான் அகோங்கிற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு மை ஒவர்சீஸ் வோட் ( MyOverseasVote) என அழைக்கப்படும் நெருக்குதல் அமைப்பு ஒன்று கூறுகிறது.

அதற்குப் பின்னர் செய்யப்படும் எதுவும் அஞ்சல் வாக்காளர்களாகத் தங்களை பதிவு செய்யாத வெளிநாட்டில் வசிக்கும் மலேசியர்கள் அந்த வாய்ப்பை நழுவ விட்டு விடுவர்  என அது மேலும் தெரிவித்தது.

“அடுத்த பொதுத் தேர்தலுக்கு புதிய விதிகளின் கீழ் மலேசியக் குடி மக்கள் தங்களைப் பதிந்து கொள்வதற்கு போதுமான அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்,” என்றும் அது கருதுகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக அந்த அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

மற்ற நாடுகளில் உள்ள மலேசியர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் “பெரும்பாலும்” வாக்களிப்பதற்கு உதவியாக அஞ்சல் வாக்களிப்பு முறையை விரிவுபடுத்துவதற்கு விதிமுறைகள் திருத்தப்படும் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அறிவித்துள்ளது பற்றி அந்த அமைப்பு கருத்துரைத்தது.

அந்த அறிவிப்பை வரவேற்ற அது, உத்தேச திருத்தங்களை ஆய்வு செய்வதற்காக வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டது.

வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

“உலகின் பல பகுதிகளில் இது போன்ற நடைமுறைக்கு குறைந்த பட்சம் மூன்று வாரங்கள் தேவைப்படுகின்றன. அதனால் முன்கூட்டியே வாக்களிப்பது அவசியமாக இருக்கலாம்.”

“உத்தேசத் திருத்தங்கள் அஞ்சல் வாக்குகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.”

அத்துடன் அந்தப் பணியை மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் உள்ள மலேசியத் தூதரகங்களுக்கு வாக்காளர் பதிவு சம்பந்தப்பட்ட விளக்கங்களை வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுக் கொண்டது.

எல்லா மலேசியத் தூதரகங்களிலும் துணைப் பதிவதிகாரிகளை நியமிப்பதின் மூலம் அந்தப் பணியை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கி விட்டதாக நேற்று அப்துல் அஜிஸ் கூறியிருந்தார்.

TAGS: