தேர்தல் சீர்திருத்தம் கோரி தூய்மையான நியாயமான தேர்தல்களுக்குப் போராடும் அமைப்பான பெர்சே 2.0 சமர்பித்த எட்டுக் கோரிக்கைகளும் “நியாயமற்றவை” அல்ல என அதன் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறுகிறார்.
பெர்சே 2.0 பரிந்துரைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுமானால் மூன்றாவது சுற்றுப் எதிர்ப்புப் பேரணி நடத்தப்படலாம் என்றும் அவர் ஏற்கனவே கோடி காட்டியுள்ளார்.
அதற்காக அம்பிகாவைக் கண்டித்த அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுதின், அவர் அரசாங்கத்தை பிணையாக வைப்பதாக குற்றம் சாட்டினார்.
“என்னைப் பொறுத்த வரை அரசாங்கமே மக்களை பிணையாக பிடித்து வைத்துள்ளது,” என அம்பிகா மலேசியாகினியிடம் கூறினார்.
அதற்கு முன்னதாக அவர் கடந்த ஆண்டு ஜுலை 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணியின் போது மனித உரிமை அத்துமீறல்கள் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது மீதான சுஹாக்கம் பொது விசாரணையில் சாட்சியமளித்தார்.
பெர்சே கூட்டமைப்பின் பரிந்துரைகள் அமலாக்கப்படுவதற்கு “மிகவும் எளிதானவை” என அவர் வலியுறுத்தினார்.
அந்தப் பரிந்துரைகளுக்கு செவி சாய்க்கப்படாவிட்டால் சாலைகளில் ஆர்ப்பாட்டம் செய்ய அந்த அரசு சாரா அமைப்பு தயங்காது என அம்பிகா நேற்று நிருபர்களிடம் கூறியிருந்தார்.
பெர்சே-யின் ஜுலை 9 பேரணிக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்வுக் குழு தனது பூர்வாங்க அறிக்கையில் அந்த கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது என அவர் சொன்னார்.
“ஆனால் சமமான ஆட்டக் களத்தை உறுதி செய்வதற்கு அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற சாதாரண வாக்குறுதியைக் கூட அரசாங்கம் கொடுக்காமல் இருப்பது மீது நாங்கள் அச்சமடைந்துள்ளோம்.”