சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-உடன் தொடர்புடைய 31 நிறுவனங்களுக்கு செம்பனை பயிரிடுவதற்காக சிங்கப்பூர் அளவு பரப்புள்ள நிலங்கள் கொடுக்கப்பட்டுள்ளதை சரவாக் நில அளவாய்வுத் துறையிலிருந்து கசிந்த பதிவேடுகள் காட்டுவதாக புருனோ மான்செர் நிதி நிறுவனம் கூறுகிறது.
அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் மொத்த பரப்பளவு 198,882 ஹெக்டர் ஆகும். அது மூன்று சிங்கப்பூர்களுக்குச் சமமானதாகும்.
“அந்த நிலக் குத்தகைகளை தாயிப் தலைமையிலான அரசாங்கம் வழங்கியுள்ளது. போர்னியோ காடுகளைத் திட்டமிட்டு அழிப்பதாகவும் பெரிய அளவில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சரவாக் அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது,” புருனோ மான்செர் விடுத்த நேற்று விடுத்த அறிக்கை கூறியது.
மொத்த நிலமும் 95.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டது.
“சரவாக் அரசாங்கம் தாயிப் குடும்பத்துக்கு கொடுத்த நிலத்தின் மதிப்பு மிக மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ள வேளையில் அந்த நிலக் குத்தகைகளில் பாதி- 45,000 ஹெக்டர்- இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.”
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தாயிப் குடும்பத்துக்கு எதிராக ஜனவரி மாத இறுதிக்குள் எடுக்க வேண்டும் என்றும் புருனோ மான்செர் காலக் கெடு விதித்துள்ளது.
“அது அதனைச் செய்யத் தவறினால் ஊழலுக்கு எதிரான ஐநா ஒப்பந்தத்தை அமலாக்கத் தவறி விட்டதாக மலேசியாவுக்கு எதிராக ஐநா-வில் புருனோ மான்செர் புகார் செய்யும்.”
மலேசியா கையெழுத்திட்டுள்ள சில அனைத்துலக ஒப்பந்தங்களில் அந்த ஒப்பந்தமும் ஒன்றாகும்.