இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அதிகாலை தூக்கிலிடப்படுவார்கள் என்று வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜீவ் கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.
இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் முருகனின் மனைவி நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் இந்த மாதத்தின் துவக்கத்தில் இந்திய குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தற்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால் இவர்களின் தூக்குத் தண்டனையை இந்திய அரசு ரத்துசெய்யவேண்டும் எனக்கோரி தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகிறது.
சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் இன்று தொடரூந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போல் கோவை சட்டக் கல்லூரி மாணவர்களும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ஆட்சியர் சட்டக் கல்லூரி மணவர்களால் சிறைபிடிப்பு!
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் கருணாகரனை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பணிமனையை பூட்டி, சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மூவரின் உயிரைக் காக்க தீவிர முயற்சி
தூக்கு தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை ம.தி.மு.க கட்சி தலைவர் வைகோ வேலூர் சிறையில் சந்தித்து பேசினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தூக்கு தண்டனை ரத்து செய்ய அடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து மூவரிடம் பேசிதயாக கூறினார்.
முன்னதாக தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி கொடுக்கப்பட்ட கருணை மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து திங்கட்கிழமை அன்று மூவரின் மேல் முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து தூக்கு தண்டனை ரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கருணை மனு அனுப்பட்டது. கருணை மனுவை வேலூர் சிறை கண்காணிப்பாளரிடம் தூக்கு தண்டனை பெற்ற மூவரும் கொடுத்தனர்.