அமெரிக்காவின் புகழ் பெற்ற புகைப்பட தயாரிப்பு நிறுவனமான கொடாக் நொடிக்கும் நிலையிலிருந்து சட்டரீதியான பாதுகாப்பை கோரியுள்ளது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே, கையில் பிடித்து புகைப்படும் எடுக்கும் கருவியை பெருவாரியான மக்களிடம் எடுத்துச் சென்ற பெருமை கொடாக் நிறுவனத்துக்கு உண்டு. ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்ப மாறுதலை அணைத்துக்கொள்வதில் அந்த நிறுவனம் மிகத் தாமதமாக செயல்பட்டது என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
1880-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் ஈஸ்ட்மேன் அவர்களால் கொடாக் நிறுவனம் ஏற்படுத்தப்பட்ட பிறகு, இருபதாம் நூற்றாண்டில் மிகவும் அறியப்பட்ட வர்த்தகப் பெயர்களில் ஒன்றாக அது திகழ்ந்தது.
கொடாக் தருணங்கள் என்று கூறப்பட்ட பல இலட்சம் குடும்ப புகைப்படங்கள் உட்பட பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் கொடாக் கேமராவில் எடுக்கப்பட்டுள்ளன.
மனிதன் நிலவில் முதலில் கால்பதித்த தருணத்தை பதிவு செய்ய நீல் ஆம்ஸ்ட்ராங் கொடாக் கேமராவைத்தான் பயன்படுத்தினார். 1892-ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கொடாக் எனும் நிறுவனம் உருவான பிறகு 1970-கள் வரை அமெரிக்க புகைப்பட சந்தையில் 90 சதவீதம் அந்த நிறுவனத்திடம் இருந்தது.
ஆனால் உலகளவில் புகைப்பட தொழில்நுட்பம் டிஜிட்டலுக்கு மாறிய பிறகு, அந்த மாற்றத்தை மிக மெதுவாகத்தான் கொடாக் ஏற்றுக் கொண்டது, அதுவே அதன் வீழ்சிக்கு வித்திட்டது.
கடந்த 15 ஆண்டுகளில் கொடக் நிறுவனத்தின் மதிப்பு 35 பில்லியன் டாலர்களிலிருந்து 150 மில்லியன் டாலர்களுக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்தது.
நிர்வாகத்தை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளை கொடாக் எடுத்துவரும் வேளையில், நிறுவனம் நிலைகுலையாமல் இருக்கும் நோக்கில் ஒரு பில்லியன் டாலர்கள் கடனை கொடாக் திரட்டியுள்ளது.
மேலும் தம்மிடமுள்ள காப்புரிமைகளை விற்று போதுமான அளவுக்கு நிதியை திரட்டி கொடாக் நிறுவனத்தை பிழைக்க வைக்க முடியும் என்று அதன் உயரதிகாரிகள் நம்புகிறார்கள்.
அண்மைய காலங்களில் தம்மிடமுள்ள காப்புரிமையின் மூலம் பயனடையும் செயல்பாடுகளிலும் கொடாக் இறங்கியது. அது தொடர்பில் ஆப்பிள், எச்டிசி மற்றும் சாம்சங் நிறுவனங்கள் மீது வழக்கும் தொடுத்தது.
தற்போது நொடிக்கும் நிலையிலிருந்து தமக்கு பாதுகாப்பு கிடைக்குமானால், 2013 -ஆம் ஆண்டுக்குள், நிதிநெருக்கடியில் இருந்து மீண்டு தனது தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள முடியும் என கொடாக் நம்புகிறது.
ஏற்கனவே சிட்டிகுரூப் நிறுவனத்திடமிருந்து 950 மில்லியன் டாலர்கள் கடனை கொடாக் ஏற்பாடு செய்துள்ளது.
தனது இலாபங்கள் வீழ்ச்சியடைவதை தடுக்கும் நோக்கில், கடந்த சில காலமாக புகைப்பட தொழிலிலிருந்து கொடாக் விலகி, கணினி அச்சுப்பொறிகளில் கவனம் செலுத்தியது.
உலகளவில் இருபதாம் நூற்றாண்டில் அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத நினைவுகளை பாதுகாத்து வைத்ததில் கொடாக்குக்கு ஒரு பங்கு உள்ளது, ஏனென்றால் அந்த நிறுவனத்திடம்தான் அந்தப் பணி பெரும்பாலானவர்களால் ஒப்படைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டுகிறார் டொடரண்டோவிலுள்ள ரயர்ஸன் பல்கலைகழகத்தில் புகைப்படத்துறை பேராசிரியராக இருக்கும் ராபர் பர்லி.