என் கௌரவத்தைக் காப்பாற்றுங்கள் என சைபுல் ஏஜி-யிடம் மீண்டும் மன்றாடுகிறார்

அன்வார் இப்ராஹிம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சட்டத்துறைத் தலைவர் முறையீடு செய்து கொள்வாரா இல்லையா என்னும் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காத வேளையில் புகார்தாரரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான், முறையீடு செய்யுமாறு அவருக்கு மீண்டும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அரசு தரப்பு ஜனவரி முறையீட்டை சமர்பிப்பதற்கான இறுதி நாள் இந்த மாதம் 25ம் தேதி ஆகும்.

தமது கௌரவத்தைக் காப்பாற்றுவதற்கு முறையீடு செய்து கொள்ளுமாறு கடைசி நேர முயற்சியாக சைபுல் ஏஜி என்ற சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டெய்லுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஸாம்ரி இட்ருஸ் அண்ட் கோ என்னும் தமது வழக்குரைஞர் நிறுவனம் வழியாக தாம் அந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளதாக சைபுல் தமது வலைப்பதில் குறிப்பிட்டுள்ளார்.

“முறையீட்டை சமர்பிக்குமாறு நான் பகிரங்கமாக விண்ணப்பித்துக் கொண்டதற்கு எந்தப் பதிலும் இல்லை. அதனால் நான் அதிகாரத்துவக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். காலம் சுருங்கிக் கொண்டிருக்கிறது.”

“என்னுடைய கௌரவமும் நேர்மையும் எதிர்காலமும் சம்பந்தப்பட்டுள்ளதால் அந்த முறையீடு மிகவும் முக்கியமானதாகும்.  நான் அந்த முறையீட்டை செய்து கொள்ள முடியும் என்றால் நான் மற்றவர்களுக்கு சுமையை ஏற்படுத்தாமல் நானே அதனைச் செய்திருப்பேன்.”

என்றாலும் முறையீடு செய்து கொள்வதற்கான அதிகாரம் ஏஜி-யிடம் மட்டுமே இருப்பதாக சைபுல் குறிப்பிட்டார்.

“கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு மலேசியக் குடிமகன் என்னும் முறையில் மட்டுமே நான் என்னுடைய உரிமைகளைக் கோருகிறேன். எந்த ஒரு புகாரும் நாட்டின் உயரிய நீதிமன்றம் வரையும் செவிமடுக்கப்பட வேண்டும்.”

“சட்டத்துறைத் தலைவர் என்னுடைய விண்ணப்பத்தை பரிசீலினை செய்வார் என நான் பிரார்த்திக்கிறேன்,” என சைபுல் தமது வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தமது வலைப்பதிவின் இறுதியில் அவர் தமக்கு ஆதரவு அளித்து வரும் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நேற்று சைபுலின் தந்தை அஸ்லான் முகமட் லாஸிம், அன்வார் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து முறையீடு செய்து கொள்ளுமாறு ஏஜி-க்கு வேண்டுகோள் விடுத்தார்.

அவ்வாறு முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.

முறையீடு செய்து கொள்ளப்பட மாட்டாது என்று சில வட்டாரங்கள் கருதுகின்றன. அல்தான்துயா ஷாரிபு கொலை வழக்கில் அரசியல் ஆய்வாளரான அப்துல் ரசாக் பகிந்தா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யப்படவில்லை.

முறையீடு தாக்கல் செய்யப்பட வேண்டும் என அந்த வழக்கில் அரசு தரப்புக்குத் தலைமை தாங்கிய, விரைவில் பதவி ஒய்வு பெறவிருக்கும் சொலிஸிட்டர் ஜெனரல் II முகமட் யூசோப் ஜைனல் அபிடின் பரிந்துரை செய்துள்ளார்.

முறையீடு செய்வது மீது இன்னும் எந்த முடிவும் செய்யப்படவில்லை என சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தில் உள்ள முறையீடுகள் விசாரணைப் பிரிவுத் தலைவர் கமாலுதின் முகமட் சைட் நேற்று மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அன்வார் இப்ராஹிம், தாம் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்து கொள்ளப்படுமா இல்லையா என உறுதியாகத் தெரியாத வேளையில் நேற்று நன்றி தெரிவிக்கும் தொழுகையை நடத்தியுள்ளார்.