ஹிம்புனின் “ஒரு மில்லியன் மக்கள்” பேரணி பினாங்கிலும் நடத்தப்படும்

இஸ்லாத்தை வலுப்படுத்தவும் கூட்டரசு அரசியலமைப்பைத் தற்காக்கவும் முஸ்லிகளை கிறிஸ்துவ சமயத்துக்கு மதம் மாற்றும் முயற்சிகளை முறியடிக்கவும் ஹிம்புன் (Himpun)என்ற முஸ்லிம் அரசு சாரா அமைப்பு பினாங்கு தலைத்தில் உள்ள கெப்பாளா பத்தாஸில் விளக்கக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறது.

ஹிம்புன் அமைப்பின் ஊடக தகவல் பிரிவுத் தலைவர் மான்சோ இப்ராஹிம் அந்தத் தகவலை வெளியிட்டார். சமய எதிர்ப்பு நடவடிக்கைகளை தடுப்பதும் ஒரினச் சேர்க்கையை தடுப்பதும் அந்தக் கூட்டத்தின் மற்ற நோக்கங்கள் என அவர் சொன்னார்.

“Himpunan Sejuta Umat” என்று அழைக்கப்படும் அந்தக் கூட்டம் நிகழும் தேதி வரும் ஞாயிற்றுக்கிழமை கெப்பாளா பத்தாஸில் நிருபர்கள் சந்திப்பு ஒன்றில் அறிவிக்கப்படும்.

சிலாங்கூர் ஷா அலாம் அரங்கில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ஹிம்புன் பேரணி ஒன்றை நடத்தியுள்ளது.  “இஸ்லாத்தை மருட்டும் சக்திகளுக்கு” எதிராக வலிமையைக் காட்டும் அந்த நிகழ்வில் ஐயாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து பேராக் கோலாக் கங்சாரில் டிசம்பர் 17ம் தேதியும் சிரம்பான் நெகிரி செம்பிலானில் ஜனவரி 7ம் தேதியும் ஹிம்புன் கூட்டங்களை நடத்தியுள்ளது.

“இரண்டு முகங்களைக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள்

முஸ்லிம்களுக்கு எதிராக கிறிஸ்துவ இயக்கம் ஒன்று விடுத்துள்ள மருட்டல் குறித்து கவலை அடைந்துள்ள மலாய், முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும் ஹிம்புனை ஆதரிப்பதாக மான்சோர் தெரிவித்தார்.

“முஸ்லிம்களை மதம் மாற்றவும் மலேசியாவில் கிறிஸ்துவ நாட்டை ஏற்படுத்தவும் எண்ணம் கொண்ட கிறிஸ்துவ அமைப்பு ஒன்று நாட்டுக்கு வெளியிலிருந்து செயல்படுகிறது. அது சில அரசியல் தலைவர்களுக்குப் பின்னால் இருந்து கொண்டு இயங்குகிறது,” என அவர் கூறிக் கொண்டார்.

“அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற திருக்குர் ஆன் வாசகங்களை மேற்கோள் காட்டி இஸ்லாத்தின் கௌரவத்தை விற்பதற்கும் தயாராக இருக்கும் சில இரட்டை முகங்களைக் கொண்ட முஸ்லிம் தலைவர்களுடைய ஆதரவுடன் மலாய்க்காரர்களையும் இஸ்லாத்தின் புனிதத் தன்மையையும்  கீழறுப்புச் செய்யும் நோக்கம் கொண்ட சில முஸ்லிம் அல்லாதவர்களும் அதனைச் செய்து வருகின்றனர்,” என அவர் மேலும் கூறினார்.

திருநங்கைகள் சம்பந்தப்பட்ட அண்மைய Sexualiti Merdeka விழாவை அதே தலைவர்கள் ஆதரித்ததலிருந்து அந்த உண்மை தெளிவாகிறது என்றும் மான்சோர் குறிப்பிட்டார்.

“அவர்கள் முஸ்லிம் நிர்வாகத்தை நாகரீகமற்ற மக்களைப் போன்று நிராகரிக்கின்றனர். மலாய்க்காரர்களுடைய உணர்வுகளைப் பாதிக்கக் கூடிய கொடுமையான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்,” என்றார் அவர்.

கெப்பாளா பத்தாஸில் உள்ள Dewan Pusat Budi Penyayangல் பினாங்குப் பேரணி நிகழும். அதில் பதவி நீக்கப்பட்ட முன்னாள் சிலாங்கூர் பாஸ் ஆணையாளர் ஹசான் அலி உட்பட பல முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொள்வார்கள்.

TAGS: