தேர்தல் சீர்திருத்தம்: மலேசியா நிலை என்ன? ஜான் ஆர் மெல்லட்

மலேசியாவில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள யோசனைகள், அவற்றுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எதிர்ப்பு அறிக்கைகள் பற்றியது இந்த இரண்டாவது கட்டுரை ஆகும்.

 

 

வெளிநாட்டில் வாழும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதியுங்கள்

வெளிநாடுகளில் கல்வி கற்கும் மலேசிய மாணவர்கள், வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அரசு ஊழியர்கள், இராணுவ வீரர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் அனைத்து மலேசியர்களுக்கும் வாக்குரிமையை வழங்குமாறு பல மலேசியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் ஒரு மில்லியன் மலேசியர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத் துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் கூற்றுப்படி 2,500 பேர் மட்டுமே வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படக் கூடாது என்பதற்கு அரசாங்கம் இது நாள் வரை நியாயமான காரணத்தை வழங்கவில்லை.  என்றாலும் வெளிநாடுகளில் வசிக்கும்- அனைத்து பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களும் “பெரும்பாலும்” அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்க இயலும் என இரண்டு நாட்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் யூசோப் அறிவித்துள்ளார்.

அரசாங்கம் இதுகாறும் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களை வாக்களிக்க அனுமதிப்பதை எதிர்த்து வந்துள்ளது. அதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அந்த வெளிநாட்டு மலேசியர்கள் அம்னோ அல்லது அதன் கூட்டணித் தோழமைக் கட்சிகளை ஆதரிக்க மாட்டார்கள் என்ற கவலை முதல் காரணமாகும். இரண்டாவதாக வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர் அல்லாதவர். அவர்கள் அம்னோவுக்கு வாக்களிக்கும் சாத்தியம் இல்லை.

ஆகவே வெளிநாட்டு மலேசியர்களை வாக்களிக்க அனுமதிப்பது, தனது நலன்களுக்கு எதிராக முடியக் கூடும் என அம்னோ முடிவு செய்திருக்க வேண்டும்.

வெளிநாடுகளில் வசிக்கும் தங்களது குடி மக்களில் எத்தகையவர்கள் வாக்களிக்க முடியும் என்பது மீது அனைத்துலக ஒப்பந்தம் ஏதுமில்லை.

ஏசிஇ எனப்படும் வாக்காளர் அறிவாற்றல் கட்டமைப்பு 214 நாடுகளிலும் பிரதேசங்களிலும் பின்பற்றப்படுகின்ற நடைமுறைகளை ஆய்வு செய்தது. அதில் பாதிக்கும் சற்று கூடுதலான நாடுகள் வெளிநாடுகளிலிருந்து தங்கள் குடிமக்கள் வாக்களிப்பதற்கு அனுமதிக்கின்றன. அந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். 99 நாடுகளும் பிரதேசங்களும் வெளிநாட்டு வாக்காளர்களை ஏற்றுக் கொள்வதில்லை.

அந்த 115 நாடுகளில் 80 நாடுகள் வெளிநாட்டு வாக்களிப்புக்கு அந்த வாக்காளர் பிரஜையாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை.  ஆனால் மலேசியா உட்பட 35 நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அவை அந்த நபர் வெளிநாட்டில் இருப்பதற்கான காரணம் அல்லது வசித்த காலம் பற்றிய கட்டுப்பாடுகள் ஆகும்.

“கடமை அடிப்படையிலான கட்டுப்பாடுகளை” விதித்துள்ள பல நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும். நீங்கள் ஏன் வெளிநாட்டில் இருக்கின்றீர்கள்? மலேசியா விஷயத்தில் அரசதந்திர அதிகாரிகளும் மாணவர்களும் மட்டுமே வாக்களிக்கலாம். இந்தியா, சிங்கப்பூர், இஸ்ரேல் போன்ற பல நாடுகளும் அது போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளன.

சில நாடுகள் “கடமை அடிப்படையிலான கட்டுப்பாடுகளை” அல்லது வேலை தொடர்புடைய கட்டுப்பாடுகளை வழக்கமாக விதிப்பது இல்லை. என்றாலும் அவை கால வரம்பை விதிக்கின்றன.

வெளிநாடுகளில் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் வசித்து விட்ட அல்லது இன்னொரு நாட்டில் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்று விட்டவர்கள் தேசியத் தேர்தல்களில் வாக்களிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணமே அதற்குக் காரணமாகும்.

எடுத்துக் காட்டுக்கு ஆஸ்திரேலியக் குடிமகன் ஒருவர் ஆறு ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டில் வாழ்ந்து விட்டால் அவருக்கு வாக்களிக்கும் உரிமையை ஆஸ்திரேலியா நிராகரிக்கிறது. பிரிட்டனுக்கு அது 15 ஆண்டுகள் ஆகும். ஜெர்மனியர் ஒருவர் வெளிநாட்டில் 25 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் மட்டுமே வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார்.

சுருக்கமாகச் சொன்னால் அனைத்துலக ஒப்பந்தம் என்று ஏதுமில்லை. உலக நாடுகளில் பாதி வெளிநாட்டு வாக்களிப்பை அனுமதிக்கவில்லை. என்றாலும் அதனை அனுமதிக்கும் சில நாடுகளில் அதிகமான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடு மலேசியாவாகும்.

தேர்தல் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுடைய வாக்களிக்கும் தகுதி பற்றி தேசிய அளவில் கலந்துரையாடல் நிகழ்வது பயனுடையதாக இருக்கும்.

TAGS: