தேசநிந்தனை குற்றச்சாட்டு: கர்பால் தற்காப்பு வாதம் செய்யுமாறு உத்தரவு

பேராக் மாநிலத்தில் 2009 ஆம் ஆண்டு நடந்த அரசமைப்பு குழப்படியில் மூத்த வழக்குரைஞரும் டிஎபி தேசியத் தலைவருமான கர்பால் சிங் கூறிய கருத்திற்காக அவர் மீது தேசநிந்தனை குற்றம் சுமத்தப்பட்டது. அக்குற்றச்சாட்டில் தற்காப்பு வாதம் புரியுமாறு புத்ரா ஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது.

மூத்த வழக்குரைஞர் கர்பால் கூறியதின் விளைவு குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி எடுத்த முடிவில் தவறு செய்து விட்டார் என்று மூவர் அடங்கிய உச்சநீதிமன்ற குழுமத்திற்கு தலைமையேற்றிருந்த தலைமை நீதிபதி அஹ்மட் மாரூப் அவரது தீர்ப்பில் கூறினார்.

எழுத்து மூலமாக வழங்கப்பட்ட தீர்ப்பை வாசிக்க அவர் இரண்டு மணி நேரம் எடுத்துக்கொண்டார். அத்தீர்ப்பில் கர்ப்பால் கூறியவாறு பேராக் சுல்தானின் அதிகாரம் நீதிபரிபாலன மறு ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதல்ல என்று அவர் கூறினார்.

சுல்தான் சட்டத்தை மதிக்கவில்லை என்றும் பேராக் மாநில அரசமைப்புச் சட்டம் பிரிவு 16(6) ஐ மீறி அவர்  செயல்பட்டார் என்றும் கர்பால் கூறியிருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

பிரிவு 16(6) மந்திரி புசாரை நியமிப்பதற்கான சுல்தானின் அதிகாரம் பற்றியதாகும்.

“அந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது மாநில சுல்தான் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அது சுல்தானின் நன்மதிப்பைப் பாதித்துள்ளதோடு மக்களுக்கும் அவர்களுடைய ஆட்சியாளருக்கும் இடையிலான உறவில் மோதலை உருவாக்கியது.

“அரசு தரப்பு வழக்குரைஞரைப் பொறுத்த வரையில் அங்கு கூறப்பட்டது மோதலில் முடிவுற்றது என்பதை மட்டும் நிரூபித்தால் போதுமானது. தேசநிந்தனை வழக்கில் நோக்கம் இருந்தது என்று நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை. குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக வழக்கு இருக்கிறது என்பதில் நீதிமன்றம் மனநிறைவு அடைகிறது”, என்று தலைமை நீதிபதி கூறினார்.

கர்பால் ஒரு மதிப்பிற்குரிய மூத்த வழக்குரைஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற போதிலும், அவர் கூறியது பேச்சு சுதந்திரத்திற்கு உட்பட்டதல்ல ஏனென்றால் அது கட்டுப்பாடற்றதல்ல என்று நீதிபதி மேலும் கூறினார்.

 பேராக் மாநில செயலாளர் மற்றும் பேராக் சுல்தான் ஆகியோரின் வலைத்தளங்களில் சுல்தான் புதிய மந்திரி புசாரை நியமிக்க முடிவு செய்யப்பட்ட பின்னர் பல கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்ததை அவர் குறிப்பிட்டார்.

கோலகங்சார் உபுடியா மசூதிக்கு வெளியிலும் புதிய மந்திரிபு புசார் நியமனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

“இந்த வழக்கில் நோக்கம் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாததால் இது ஒரு கடுமையான குற்றமாகும்”, என்று நீதிபதி அஹமட் கூறினார்.

“திடீர் தாக்குதல் முறை விசாரணை” நிராகரிப்பு

தேசநிந்தனைச் சட்டம் செக்சன் 3(1)(f) சட்டப்பூர்வமானதால் அரசு தரப்பு இப்பிரச்னையை உயர்நீதிமன்றத்தில் எழுப்பாமல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுப்பியது “திடீர் தாக்குதல் முறை விசாரணை” என்ற விவாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

கர்பால் தெரிவித்த கருத்திற்கு எதிராக 103 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருப்பதை நீதிபதி குறிப்பிட்டார்.

தீர்ப்பு கூறுவதற்கு முன்பு நீதிபதி அஹமட் செய்தியாளர் கூட்டத்தில் தேசநிந்தனை கூறுகளைக் கொண்டதாக கருதப்படும் கர்பாலின் பேச்சை முழுமையாக வாசித்தார்.

இத்தீர்ப்பு ஏகமனதாக வழங்கப்பட்டது. அரசு தரப்பின் மேல்முறையீட்டை செவிமடுத்த இதர இரண்டு நீதிபதிகள் முகமட் அபாண்டி மற்றும் கிளமெண்ட் அல்லன் ஸ்கின்னர் ஆவர்.

இதனைத் தொடர்ந்து கர்பாலின் தற்காப்பு வாதம் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் செவிமடுக்கப்படும். தற்காப்பு விவாதத்தை செவிமடுப்பதற்கான தேதியை நிருணயிப்பதற்காக கர்பால் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் பெப்ரவரி 9 இல் இருக்கவேண்டும் நீதிபதி அஹமட் உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் டிஎபி முன்னாள் தலைவர் டாக்டர் சென் மான் ஹின் மற்றும் லிம் கிட் சியாங் ஆகியோருடன் ஏராளமான டிஎபி உறுப்பினர்களும் கூடியிருந்தனர்.

கர்பாலுக்கு எதிரான தேசநிந்தனைக் குற்றச்சாட்டில் தற்காப்பு விவாதம் செய்ய அழைக்கப்படாமலே அவரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஜூன் 11, 2010 இல் விடுவித்தது.

தேசநிந்தனைச் சட்டம் 1948 செக்சன் 4(1) இன் கீழ் கர்பால் மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டால் அதிக பட்சமான ரிம5,000 அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைதண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படுவதற்கு அச்சட்டம் வகை செய்கிறது.

TAGS: