எதிர்த்தர்ப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் தமது முன்னாள் உதவியாளரை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்த கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் முறையீடு செய்து கொண்டுள்ளது.
கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் கிரிமினல் பதிவகத்தில் முறையீட்டுக்கான நோட்டீஸ் இன்று மாலை மணி 4.30க்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் துணைப் பதிவதிகாரி ஹாலிலா சுபோ அந்தத் தகவலை உறுதி செய்துள்ளார்.
23 வயதான முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக கூறும் குற்றச்சாட்டிலிருந்து அன்வாரை ஜனவரி 9ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி ஜபிடின் முகமட் டியா விடுவித்தார்.
64 வயதான எதிர்த்தரப்புத் தலைவரை விடுவித்த ஜபிடின், அரசு தரப்பு வழங்கிய டிஎன்ஏ என்ற மரபணு ஆதாரங்கள் மீது ஐயம் தெரிவித்தார்.
“அந்த ஆதாரத்தைப் பரிசீலித்த பின்னர் சேதம் ஏதும் நிகழ்ந்திருக்கலாம் என்பதால் அந்த ஆதாரத்தை 100 விழுக்காடு உறுதியாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.”
“ஆகவே சைபுலிடமிருந்து பெறப்பட்ட, ஊர்ஜிதம் செய்யும் ஆதாரத்தின் அடிப்படையில் குற்றவாளி எனக் கருத நீதிமன்றம் தயங்குகிறது,” என்றார் அவர்.
சைபுலின் உருக்கமான வேண்டுகோள்
இதனிடையே நேற்று சைபுல், தமது கௌரவத்தையும் நேர்மையையும் காப்பாற்றுவதற்காக முறையீடு செய்து கொள்ளுமாறு சட்டத் துறைத் தலைவர் அலுவலகத்தைக் கேட்டுக்கொள்ளும் உருக்கமான வேண்டுகோளை தமது வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார்.
2008ம் ஆண்டு ஜுன் மாதம் 26ம் தேதி பிற்பகல் மணி 3.01க்கும் மாலை மணி 4.30க்கும் இடையில் தேசா டமன்சாரா ஆடம்பர அடுக்கு மாடித் தொகுதியில் சைபுலை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாக அன்வார் மோது குற்றவியல் சட்டத்தின் 337பி பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.
முறையீட்டுக்கான நோட்டீஸ் சமர்பிக்கப்பட்டுள்ளதால் அரசு தரப்பு இனிமேல் ஜபிடின் எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்குவதற்குக் காத்திருக்க வேண்டும். ஆனால் நீதிபதி அதனைச் செய்வதற்கு காலக் கெடு எதுவும் கிடையாது.
அது செய்யப்பட்டதும் ஏஜி அலுவலகம் முறையீட்டு நீதி மன்றத்தில் முறையீட்டுக்கான மனுவை தாக்கல் செய்யும். அந்த நீதிமன்றம் அந்த முறையீட்டை விசாரிப்பதற்கான தேதியை நிர்ணயம் செய்யும்.