கர்பால் கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்து கொள்வது பற்றிப் பரிசீலிக்கிறார்

மூத்த வழக்குரைஞரான கர்பால் சிங்,  தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேச நிந்தனைக் குற்றச்சாட்டில் எதிர்வாதம் செய்யுமாறு முறையீட்டு நீதிமன்றம் தமக்கு ஆணையிட்டதைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்வது பற்றி பரிசீலித்து வருகிறார்.

“இன்றைய முறையீட்டில் அரசு தரப்பு தோல்வி கண்டிருந்தால் அது கூட்டரசு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்யும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்,” என்றார் அவர்.

“ஆகவே இன்றைய முடிவைத் தொடர்ந்து கூட்டரசு நீதிமன்ற முடிவுதான் இறுதியானது என்பதால் நானும் முறையீடு செய்து கொள்வது பற்றிப் பரிசீலிக்கக் கூடும்.”

2009ம் ஆண்டு பேராக் அரசமைப்பு நெருக்கடியின் போது கர்பால் விடுத்த அறிக்கை ஒன்றின் தொடர்பில் அவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.

தாம் இன்றைய முடிவை மதித்தாலும் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டம் “காலத்துக்கு ஒவ்வாதது” என்பதால் தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என கர்பால் சொன்னார்.

உண்மையில் பக்காத்தான் ராக்யாட் ஆட்சிக்கு வந்தால் அத்தகையை ஒடுக்குமுறைச் சட்டங்கள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என யோசனை கூறப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீதிபதி நீண்ட தீர்ப்பை வழங்கியதால் தாம் அத்தகைய முடிவை ஒரளவு எதிர்பார்த்ததாக அவர் சொன்னார்.

‘காரணங்களை முழுமையாக தந்தது நல்லது’

சில நீதிபதிகள் செய்வதைப் போல  காரணங்களை பொதுவாக தெரிவிக்காமல் காரணங்களை முழுமையாக அவர் தந்திருப்பது நல்லது. நாங்கள் அந்தத் தீர்ப்பை ஆராய்வோம்.,” என புக்கிட் குளுகோர் எம்பி-யுமான அவர் சொன்னார்.

தேச நிந்தனைக் குற்றச்சாட்டில் எதிர்வாதம் புரியுமாறு முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட குழு கர்பாலுக்கு ஆணையிட்டது. ஏற்கனவே கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு ஜுன் மாதம் 11ம் தேதி அந்தக் குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து அரசு தரப்பு முறையீட்டு நீதிமன்றத்துக்கு முறையீடு செய்து கொண்டது.

TAGS: