“ஹாங் துவா-வை வரலாற்றுப் பாடத் திட்டத்தில் வைத்திருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை”

ஹாங் துவா என்னும் புகழ் பெற்ற மலாய் வீரர் இருந்ததற்கு ஆதரவான ஆவணங்கள் இருப்பதால் வரலாற்றுப் பாடப் புத்தகங்களை திருத்தி எழுத வேண்டிய அவசியமில்லை என வரலாற்று ஆசிரியரான ரஞ்சித் சிங் மால்ஹி கூறுகிறார்.

ஒ டபிள்யூ வோல்ட்டர்ஸ், சி மேரி டேர்ன்புல் ஆகிய பிரபலமான வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ள புத்தகங்களில் ஹாங் துவா, 15ம் நூற்றாண்டு மலாக்கா சுல்தான்கள் ஆட்சிக் காலத்துல் கடற்படைத் தலைவராக- அட்மிரலாகப் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர் என ரஞ்சித் சொன்னார்.

ஹாங் துவா-வும் ஹாங் ஜெபாட்-டும் கற்பனைப் பாத்திரங்கள் என பிரபலமான வரலாற்றுப் பேராசிரியர் கூ கே கிம் கூறியுள்ளது பற்றி ரஞ்சித் கருத்துரைத்தார்.

மலாக்கா சுல்தான் மான்சோர் ஷா-வின் ஐந்தாவது மனைவி எனக் கூறப்படும் இளவரசி ஹாங் லி போ பற்றியும் எழுத்துப்பூர்வமான ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும் கூ வலியுறுத்தியுள்ளார்.

அந்த மூவரும் உயிர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இல்லாததால் அவர்களுடைய பெயர்களை வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து  நீக்குவதற்கு அவை மீண்டும் எழுதப்பட வேண்டும் எனவும் கூ யோசனை கூறியிருந்தார்.

“நடப்பு வரலாற்றுப் பாடப் புத்தகத்தின் 2002ம் ஆண்டு பதிப்பில் ஹாங் துவா பக்கம் 61லும் பக்கம் 83லும் துணிச்சலான வீரர் என்றும் லக்ஸமாணாவாக (கடற்படைத் தளபதி) பணி புரிந்தார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

“ஹாங் லி போ பற்றியும் இதர மலாக்கா வீரர்களைப் பற்றியும் எந்தக் குறிப்பும் அதில் இல்லை. என்றாலும் முதலாம் படிவத்துக்கான வரலாற்றுப் பாடப் புத்தகத்தின் 1996ம் ஆண்டு பதிப்பில் பக்கம் 36லும் பக்கம் 40லும் ஹாங் துவா-வுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஹாங் துவா-வுடன் இருந்த வீரர்களான ஹாங் ஜெபாட், ஹாங் கஸ்தூரி, ஹாங் லெக்கிர், ஹாங் லெக்கியூ ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளது,” என ரஞ்சித் விளக்கினார்.

“உண்மையில் Sejarah Melayu (மலாய் வரலாறு) மலாக்கா சுல்தான்கள் ஆட்சிக் காலம் குறித்து மலாய் மொழியில் உள்ள சிறந்த இலக்கிய, வரலாற்று ஆவணமாக பிரிட்டானிக்கா கலைக்களஞ்சியம் கூட அங்கீகரித்துள்ளது,” என்றார் ரஞ்சித்.

உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் குறைவாக உள்ளன”

ஹாங் துவா-வைத் தவிர 600 ஆண்டுகளுக்கு முன்பு தொகுக்கப்பட்ட Sejarah Melayu -வில் பெரிதாக குறிப்பிடப்பட்டுள்ள மற்ற பாத்திரங்கள் பற்றி ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றில் அவ்வளவாக குறிப்பிடப்படவில்லை என வரலாற்றுப் பேராசிரியான ஜைனல் கிளிங் கூறினார்.

உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் குறைவாக  இருப்பதால் அவற்றை கற்பனைப் பாத்திரங்கள் என ஒதுக்குவதற்கு முன்பு விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜைனல் கருதுகிறார்.

“சுல்தான் மான்சோர் ஷா, தூதுப் பயணம் மேற்கொண்டு சீனாவுக்கு துன் பெர்பாத்தே பூத்தே என்பவரை அனுப்பியதாகவும் அவர் மான்சோர் ஷா-விற்கு ஒர் மனைவியாக சீன இளவரசி ஹாங் லி போ-வையும் பல சீனர்களையும் அழைத்து வந்தார் என்றும் மலாய் வரலாறு குறிப்பிட்டுள்ளது. அந்த சீனர்கள் புக்கிட் சீனாவில் குடியேறினார்கள்.”

“அது வரலாற்று உண்மையா அல்லது மலாக்கா ஆட்சியாளர்களுடைய பெருமையைக் காட்டுவதற்கான கற்பனையா என்பதை நாம் உறுதி செய்ய வேண்டிய தேவை உள்ளது,” என ரஞ்சித் மேலும் கூறினார்.

உண்மையை துல்லிதமாகவும் உறுதியாகவும் தெரிவிப்பதற்கு வரலாற்றுப் பாடத் திட்டம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அந்த வரலாற்றுப் பாடப் புத்தக ஆசிரியர் சொன்னார்.

TAGS: