40 மில்லியன் ரிங்கிட் நில ஊழலில் முந்திய மாநில அரசாங்கம் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியதற்காக மன்னிப்புக் கேட்குமாறு விடுக்கப்பட்டுள்ள அறைகூவலை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் நிராகரித்துள்ளார்.
“ஊழல்கள் பிஎன் கலாச்சாரம்” என வருணித்த அவர் அந்தக் குறிப்பிட்ட நில மோசடி 2002ம் ஆண்டு நிகழ்ந்தது என்றார். அப்போது பிஎன் நிர்வாகம் இரண்டு தனியார் துண்டு நிலங்களை வணிகரான- தான் ஹாக் ஜு-வுக்கு அங்கீகரித்தது என்று அவர் சொன்னார்.
கல் எடுக்கும் பணிகளுக்காக செபராங் பிராயில் அந்த நிலங்களை வாங்கிய தான், பின்னர் அந்த அங்கீகாரத்தை ரத்துச் செய்தற்காக மாநில அரசின் மீது வழக்குத் தொடர்ந்தார்.
சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நிலங்களும் 1969ம் ஆண்டு ஜுலை மாதம் தொடக்கம் ஹொக் தெய்க் செங் சின் கோயில்- பெர்சத்துவான் ஹொக்கியான் ஹோய் குவான் பிராவின்ஸ் வெல்லெஸ்லி ஆகிய இரண்டு சங்கங்களின் பெயர்களில் பதிவாகி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் அந்த அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டது.
“அந்த தவறு நிகழ்ந்த போது அது மோசடியாகும். தான் -க்கு தனியார் நிலம் கொடுக்கப்பட்டிருக்கும் போது நீங்கள் எப்படி தவறு செய்திருக்க முடியும்?” என அவர் இன்று பினாங்கில் வினவினார்.
அரசாங்க நிலத்தைக் கொடுப்பதற்கு மாநில அரசுக்கு உரிமை உண்டு, தனியார் நிலத்தை அல்ல என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், “அது, தான் -க்கு அதனை எப்படிச் செய்ய முடியும் ?” என்றும் கேள்வி எழுப்பினார்.
பினாங்கு மாநில பிஎன் பணிக் குழுத் தலைவர் டாக்டர் தெங் ஹொக் நான்-க்கு “துணிச்சலும் வீரமும் இருந்தால்” அந்த விவகாரம் ஊழல் எனக் கூறுவதற்காக என் மீது அல்லது மாநில அரசு மீது வழக்குப் போடலாம் என லிம் குவான் எங் சவால் விடுத்தார்.
தோல்வியில் முடிந்த தான் சம்பந்தப்பட்ட நிலப் பேரத்தை வருணிப்பதற்கு “ஊழல்” என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துவதை லிம்-மும் மாநில அரசாங்கமும் மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு கூறியதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும் என்றும் நேற்று தெங் கோரியிருந்தார்.
மாநில அரசாங்கம் 40 மில்லியன் ரிங்கிட்டுக்குப் பதில் 500,000 ரிங்கிட் இழப்பீடு கொடுத்தால் போதும் என அண்மையில் புத்ராஜெயாவில் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து தெங் அவ்வாறு கேட்டுக் கொண்டார்.
இதனிடையே 2008ம் ஆண்டு மாநில ஆட்சியை பக்காத்தான் ராக்யாட் கைப்பற்றிய பின்னரே அந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்டதாக லிம் தெரிவித்துள்ளார். பிஎன் அதனை பொது மக்களிடமிருந்து மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் சொன்னார்.
நீதிமன்ற முடிவு இறுதியானது அல்ல எனக் குறிப்பிட்ட லிம் அந்தத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்ய வாதி திட்டமிடுவதாக தெரிவித்தார்.
“தெங் ஊழல்களான பிஎன் பண்பாட்டில் வாழ்கிறார். அதனால் அவருக்கு அது புரியாது. இழப்பீடு குறைவாக கொடுக்கப்படுவதால் மோசடி நிகழவில்லை என அர்த்தமா?” என அவர் வினவினார்.
“தெங் அல்லது முன்னைய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் யாரும் அந்த நில மோசடிக்காக இது வரை பினாங்கு மக்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. அவர்கள் எப்போது அதனைச் செய்யப் போகின்றனர்?”