பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும், மலாய் டிஏபி தலைவர்

பினாங்கு டிஏபி தலைவர் ஒருவர் டிஏபியில் உள்ள மலாய் வேட்பாளர்களுக்காக பிகேஆர் சில இடங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

பினாங்கில் குறைந்தது ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையுமாவது பிகேஆர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று  டிஏபி மத்திய செயல்குழு உறுப்பினர் சுல்கிப்ளி முகம்மட் நூர் வேண்டிக்கொண்டார்.

தேர்தலில் டிஏபி மலாய் வேட்பாளர்களைக் களமிறக்கவில்லை என்றால் அது “மலாய் எதிர்ப்பு”க் கட்சி என முத்திரை குத்தப்படும் என்று பினாங்கு நகராட்சி மன்ற உறுப்பினருமான சுல்கிப்ளி கூறினார்.

“வாக்காளர்கள் பிகேஆரைவிடவும் டிஏபி-யை ஆதரிப்பது பல தேர்தல்களில் தெரிய வந்துள்ளது, சரவாக்கில்கூட அதுதான் நடந்தது”, என்று நேற்று செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

“எனவேதான் டிஏபி வாய்ப்பைப் பயன்படுத்தி அக்கட்சியைச் சேர்ந்த மலாய் வேட்பாளர்களை  இன்னும் அதிக எண்ணிக்கையில் களமிறக்க வேண்டும்.”

பத்து மாவுங் சட்டமன்ற தொகுதிமீது ஒரு கண்

2008 மார்ச் பொதுத்தேர்தலில், பினாங்கில் சட்டமன்றத்துக்காக டிஏபி 19 இடங்களிலும் பிகேஆர் 16 இடங்களிலும் பாஸ் 5 இடங்களிலும் போட்டியிட்டன. நாடாளுமன்றத்துக்காக டிஏபி ஏழு இடங்களிலும், பிகேஆர் நான்கு இடங்களிலும் பாஸ் இரண்டு இடங்களிலும் போட்டியிட்டன.

அம்மூன்று கட்சிகளும் சட்டமன்றத்துக்காக போட்டியிட்ட 40 இடங்களில் 29-ஐயும் நாடாளுமன்றத்துக்கான போட்டியிட்ட 13 தொகுதிகளில் 11-ஐயும் வென்றன.

மலாய் டிஏபி உறுப்பினர்கள் எந்தெந்த தொகுதிகளின்மீது கண் வைத்துள்ளனர் என்பதைத் தெரிவிக்க சுல்கிப்ளி மறுத்தார்.என்றாலும் அவர்கள் பத்து மாவுங் தொகுதியைக்  குறி வைத்திருப்பதாக ஊகிக்கப்படுகிறது. அத்தொகுதியை  பிகேஆரின் அப்துல் மாலிக் காசிம் வைத்துள்ளார். அவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

டிஏபி மலாய் பிரதிநிதிகளைப் பெற்றிருக்காவிட்டால் அக்கட்சியை மலாய்க்காரர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அது, அக்கட்சி மாநிலத்தைக் கைப்பற்றும் வாய்ப்பைப் பாதிக்கும் என்று சுல்கிப்ளி குறிப்பிட்டார்.

“பினாங்கில் பிகேஆரின் வேட்பாளர்கள் அனைவரும் தோற்றுப்போய் சீன, இந்திய பிரதிநிதிகள் மட்டுமே மாநில அரசில் இடம்பெற்றிருந்தால் அது நீண்ட காலத்துக்கு நிலைக்காது”, என்றாரவர்.

“மலாய் என்ஜிஓ-களின் (மாநில அரசில் கூடுதல் மலாய்ப் பிரதிநிதித்துவம் தேவை என்ற) கோரிக்கைகளில் சிறிதளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது”, என்றவர் வலியுறுத்தினார்.

மாநில ஆட்சிக்குழுவில் இப்போதிருப்பதைவிட துணிச்சல்மிக்க மலாய்த் தலைவர்கள் இடம்பெற வேண்டும் என்று பினாங்கு மலாய் காங்கிரஸ்(பிஎம்சி) கோரிக்கை விடுத்திருப்பது குறித்துக் கருத்துரைத்தபோது சுல்கிப்ளி இவ்வாறு கூறினார்.

எதிர்வரும் தேர்தலில் டிஏபி குறைந்தது ஐந்து மலாய் வேட்பாளர்களையாவது களமிறக்க வேண்டும் என்று பிஎம்சி கூறியது.

இதனால் பக்காத்தான் கூட்டணியில் பிரச்னைகள் வராமலிருக்க டிஏபி தலைமைத்துவத்திடம் தாமே பக்குவமாக இதை எடுத்துரைக்கப்போவதாக அவர் சொன்னார்.

மலாய் வேட்பாளர்களைத் தேர்தலில் நிறுத்தும் விசயத்தைக் கவனிக்காது இருத்தல் கூடாது என்று கூறிய சுல்கிப்ளி இதற்குமுன் தேர்தலில் போட்டியிட்ட டிஏபி மலாய் வேட்பாளர்கள் திருப்திகரமாக செய்திருக்கிறார்கள் என்றும் தோற்றாலும் குறைந்த வாக்குவேறுபாட்டில்தான் தோற்றுப்போனார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மாநிலத்தில் முன்பு மாற்றரசுக் கட்சியாக இருந்தபோது கிடைத்த மலாய் ஆதாரவைவிட இப்போது டிஏபிக்கு மலாய்க்காரர்களிடையே ஆதரவு பெருகியுள்ளதை அண்மைய ஆய்வுகள் புலப்படுத்துகின்றன என்று சுல்கிப்ளி தெரிவித்தார்.

பினாங்கில் பக்காத்தானைக் கவிழ்க்கும் வழிகளில் ஒன்றாக, பிகேஆரின் வேட்பாளர்கள் அத்தனை பேரையும் தோற்கடிக்க பிஎன் திட்டமிடுகிறது என்றாரவர்.

“டிஏபி சார்பில் மலாய்க்கார வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டால், அவர்களுக்கு மலாய்க்காரர்-அல்லாதாரின் ஆதரவும் அதிகம் கிடைக்கும். இதனால் பிஎன் வெற்றிபெறுவது கடினமாகும்”, என்றவர் சொன்னார்.

TAGS: