நஜிப்: தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்து சிறப்பு மாநாடு நடத்தப்படவேண்டும்

இந்த நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் எதிர்காலம் பற்றி விவாதிக்கவும்  நகல் பெருந்திட்டத்தை தயாரிக்கவும் சிறப்பு மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியிருக்கிறார்.

அந்த மாநாட்டில் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், சம்பந்தப்பட்ட அரசு சாரா அமைப்புக்கள் சம்பந்தப்பட வேண்டும். ரிமூவ் வகுப்புக்கள் இன்னும் தேவையா என்பது உட்பட அந்தப் பள்ளிக்கூடங்கள் தொடர்பான பல அம்சங்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

“பட்டப் படிப்பு பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பது, பள்ளிக்கூடங்களின் வடிவமைப்பு, பள்ளிக்கூடத்துக்கான தேவைகள் ஆகியவை உட்பட தமிழ்ப் பள்ளிகள் எதிர்நோக்கும் இடர்பாடுகளும் அந்த மாநாட்டில் ஆராயப்பட வேண்டும்.”

நஜிப் இன்று கோலாலம்பூரில் கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளியில் மலேசிய தமிழ்ப்பள்ளிக்கூட சமூகத்தை சந்தித்த போது அவ்வாறு கூறினார்.

அந்த மாநாட்டில் எடுக்கப்படும் தீர்மானங்களை கல்வி அமைச்சும் அரசாங்கமும் பரிசீலினைக்கு எடுத்துக் கொண்டு தமிழ்ப்பள்ளிக்கூடங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் நஜிப் தெரிவித்தார்.

“அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளையும் மற்ற பள்ளிகளையும் மேம்படுத்துவதற்கு கடப்பாடு கொண்டுள்ளது. அதில் உண்மையாகவும் நடந்து கொள்கிறது”, என நஜிப் சொன்னார்.

அவர் அந்த நிகழ்வில் கெடா, பேராக், சிலாங்கூர், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் மேலும் ஆறு தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படுவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளித்துள்ள தகவலையும் பிரதமர் அந்த நிகழ்வில் வெளியிட்டார்.

சிலாங்கூரில் கிள்ளான் தாமான் செந்தோசா, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள தாமான் பிஜேஎஸ்1, பண்டார் மகோட்டா ஆகியவற்றில் மூன்று பள்ளிகளும், கெடா சுங்கைப் பட்டாணி தாமான் கெலாடியில் ஒரு பள்ளியும், பேரா சுங்கை சிப்புட் ஹிவுட் தோட்டத்தில் ஒரு பள்ளியும் மற்றும்  ஜோகூர் மாசாய் பண்டார் ஸ்ரீ அலாமில் ஒரு பள்ளியும் கட்டப்படும்.

இந்த நாட்டிலுள்ள இந்தியர்களுக்கு தமிழ்ப் பள்ளிகள் முக்கியம் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதின் ஒரு பகுதியாக அந்தப் பள்ளிக்கூடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன என்றும் நஜிப் சொன்னார்.

அத்துடன் 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டுள்ள 15 தமிழ்ப்பள்ளிக்கூடங்களின் நிலை பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். அவை அதிக மக்கள் தொகையைக் கொண்ட இடங்களுக்கு மாற்றப்பட வேண்டுமா என்பது பற்றியும் முடிவு செய்யப்படும்.

“தமிழ்ப் பள்ளிக்கூடங்களின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளில் அதுவும் ஒன்றாகும். அரசாங்கத்துக்கும் தமிழ்ப்பள்ளிக்கூட ஆசிரியர் சங்கங்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களுக்கும் இடையில் பொதுவாக இந்திய சமூகத்துக்கும் இடையில் அணுக்கமான ஒத்துழைப்பு நிலவுவது மிக முக்கியமாகும்.”

“நமது பொதுவான நோக்கங்களை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சியாக நாம் இதனைக் கருத வேண்டும்”, என்றார் நஜிப்.

அந்த நிகழ்வின் போது  கின்ராரா தேசிய வகைத் தமிழ்ப் பள்ளிக்கு நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்கு 3.5 மில்லியன் வழங்கப்படுவதாகவும் பிரதமர் அறிவித்தார்.

பிரதமர் துறை அமைச்சருமான மஇகா தலைவர் ஜி பழனிவேல், மஇகா துணைத் தலைவரும் மனித வள அமைச்சருமான டாக்டர் எஸ் சுப்ரமணியம், இந்தியா, தெற்காசியாவுக்கான சிறப்புத் தூதர் எஸ் சாமிவேலு, பிபிபி தலைவர் எம் கேவியஸ், விவாசாய விவசாய அடிப்படைத் தொழில் அமைச்சர் நோ ஒமார் ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் முதன் முறையாக பிரதமர் கலந்து கொண்டுள்ளார்.

-பெர்னாமா