அதிரடித் தாக்குதல் நடத்தி பானி வாலிட்டை மீளக்கைப்பற்றிய கடாபி ஆதரவுப் படை!

லிபியாவின் முன்னாள் தலைவர் கர்ணல் கடாபி கொல்லப்பட்ட பின்னர் அவரது ஆதரவு படை அழிக்கப்பட்டு கடாபி ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் லிபியாவின் மேற்குப் பகுதி நகரான பானி வாலிட்டை கடாபி ஆதரவுப் படையினர் மீளக் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடாபி ஆதரவு படைகள் நடத்திய எதிர்பாராத தாக்குதலில் லிபிய இடைக்கால அரசின் படை வீரர்கள் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் அதேவேளை, அந்நாட்டின் தலைநகரனா திரிபோலி மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெங்காஸி ஆகிய நகரங்களிலும் பலத்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.

பானிவாலிட் நகரத்திலிருந்தே தாக்குதல் நடத்த ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று காலை 7 மணியளவில் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் சுமார் 150-க்கும் மேற்பட்ட கடாபி ஆதரவுப் படையினரர் பயங்கர ஆயுதங்களுடன் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்கள் கடாபி அரசாங்கத்தின் பச்சை நிறக் கொடியையும் தங்களது கைகளில் ஏந்தியிருந்ததாக லிபிய இடைக்கால தேசிய சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.