குதப்புணர்ச்சி விடுதலை மீது எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை

அன்வார் இப்ராஹிம் தமது முன்னாள் உதவியாளர் முகமட் சைபுல் புஹாரி அஸ்லானை குதப்புணர்ச்சியில் ஈடுபடுத்தியதாகக் கூறும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டது மீதான எழுத்துப்பூர்வமான தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதியின் செயலாளர் தம்மிடம் தீர்ப்பு இன்னும் தயாராகவில்லை எனத் தெரிவித்ததாக அன்வாருடைய தலைமை வழக்குரைஞர் கர்பால் சிங் கூறினார்.

கோலாலம்பூர் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி முகமட் ஜபிடின் முகமட் டியாவுடன் தீர்ப்பு குறித்து கேட்ட பின்னர் கர்பால் நிருபர்களிடம் கூறினார்.

என்றாலும் முறையீட்டுக்கான நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து எட்டு வாரங்களுக்குள் விசாரணை நீதிபதி எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வழங்க வேண்டும் என அவர் சொன்னார், தலைமை நீதிபதி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது.

குதப்புணர்ச்சி குற்றச்சாட்டிலிருந்து அன்வார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சட்டத் துறைத் தலைவர் அலுவலகம் ஜனவரி மாதம் 20ம் தேது முறையீட்டுக்கான நோட்டீஸை சமர்பித்தது. சொலிஸிட்டர் ஜெனரல் இட்ருஸ் ஹருண் கையெழுத்திட்டுள்ள அந்த நோட்டீஸ், கோலாலம்பூர் உயர் நீதிமன்ற கிரிமினல் பதிவகத்தில் சமர்பிக்கப்பட்டது.

விசாரணை நீதிபதியின் எழுத்துப்பூர்வமான தீர்ப்பில் கூறப்பட்டுள்ள காரணங்களை பரிசீலித்த பின்னர் முறையீட்டைத் தொடருவதா இல்லையா என முடிவு செய்யும் அதிகாரம் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு இருப்பதாகவும் கர்பால் சொன்னார்.

காட்சிப் பொருட்களும் விசாரணைக் குறிப்புக்களும் உள்ளடக்கிய அந்த எழுத்துப்பூர்வமான தீர்ப்பை வாசித்து அதன் மீது மன நிறைவு அடைந்தால் முறையீட்டை மேலும் தொடருவதில்லை என முடிவு செய்வது சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்தை இன்னும் சார்ந்துள்ளது என்றும் கர்பால் குறிப்பிட்டார்.

“நாங்கள் மற்ற வழக்குகளில் (முறையீடு செய்வதில்லை) அவ்வாறு செய்துள்ளோம். முறையீட்டுக்கான மனு எனக்குக் கிடைத்ததும் முறையீட்டைத் தொடருவதில் எந்தப் பயனும் இல்லை என்பதற்கான காரணங்களை நான் கண்டறிந்துள்ளேன்.”

ஜனவரி 9ம் தேதி நீதிபதி முகமட் ஜபிடின்  அன்வாரை குதப்புணர்ச்சிக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்து விடுதலை செய்தார். டிஎன்ஏ என்ற மரபணு மாதிரிகள் தூய்மை கெடவில்லை என்பதை 100 விழுக்காடு உறுதியாகக் கூற முடியாது என நீதிமன்றம் கருதுவதாக அவர் தமது தீர்ப்பில் கூறினார்.

ஆகவே ஊர்ஜிதம் செய்யப்படாத முகமட் சைபுல் அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அன்வாரை குற்றவாளி என தீர்ப்பளிக்க நீதி மன்றம் தயங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெர்னாமா