பெல்டா 1.5 பில்லியன் ரிங்கிட் பற்றாக்குறையை எதிர்நோக்கும்

பெல்டா, தனது துணை நிறுவனமான FGV எனப்படும் Felda Global Ventures Holdings Bhd  பங்குச் சந்தைப் பட்டியலில் இடம் பெறுமானால் ஆண்டு ஒன்றுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் முதல் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை பற்றாக்குறையை எதிர்நோக்கும் என பாஸ் வழி நடத்தும் பெல்டா குடியேற்றக்காரர் குழந்தைகள் சங்கமான அனாக் எச்சரித்துள்ளது.

பெல்டா தனது அனைத்துப் பங்குகளையும் FGV-இடம் ஒப்படைத்த பின்னர் அதற்கு ஆண்டு ஒன்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட குத்தகைத் தொகையாக 251 மில்லியன் ரிங்கிட்டும் FGV-யின் விவசாய நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு 257 மில்லியன் ரிங்கிட்டுக்கும் 508 மில்லியன் ரிங்கிட்டுக்கும் இடையிலான தொகையும் மட்டுமே அதற்குக் கிடைக்கும்.

ஆகவே பெல்டாவுக்கும் FGVக்கும் இடையில் உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 1.25 பில்லியன் ரிங்கிட் முதல் 1.5 பில்லியன் ரிங்கிட் வரையிலான செலவுகளை யார் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள் என அனாக் தலைவர் மஸ்லான் அலிமான் வினவினார்.

2010ம் ஆண்டு பெல்டாவின் வருமானம் 2.4 பில்லியன் ரிங்கிட் என்றும் அதன் நடைமுறைச் செலவுகள் 2 பில்லியன் ரிங்கிட் என்றும் அனாக் அமைப்பின் பொருளாதார ஆலோசகரும் முன்னாள் பாங்க் நெகாரா துணை ஆளுநருமான ரோஸ்லி யாக்கோப் தெரிவித்தார். ஆகவே அந்த ஆண்டு பெல்டாவுக்கு 400 மில்லியன் ரிங்கிட் மட்டுமே ஆதாயம் கிடைத்தது.

“ஆனால் பங்குப் பட்டியலில் இடம் பெற்றதும் குடியேற்றக்காரர்கள், நிலம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கு பெல்டா தொடர்ந்து பொறுப்பேற்கும். ஆனால் அதற்கு குத்தகைத் தொகையாக 251 மில்லியன் ரிங்கிட்டும் FGV-யின் விவசாய நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு 257 மில்லியன் ரிங்கிட்டுக்கும் 508 மில்லியன் ரிங்கிட்டுக்கும் இடையிலான தொகையும் (செம்பனை எண்ணெய் விலலகளளப் பொறுத்து) மட்டுமே கிடைக்கும்.”

“அந்த நிலையில் நடைமுறைச் செலவுகளைச் சமாளிக்க 1.25 பில்லியன் ரிங்கிட் முதல் 1.5 பில்லியன் ரிங்கிட் வரை தேவைப்படும். அப்போது பெல்டாவுக்கு ஏற்படும் பற்றாக்குறையை ஈடு செய்ய மக்கள் வரிப்பணம் பயன்படுத்தப்படுமா அல்லது அரசாங்கப் பணம் பயன்படுத்தப்படுமா ?” என நெகிரி செம்பிலான் பாஸ் துணை ஆணையருமான ரோஸ்லி வினவினார்.

அந்தக் கேள்வியை எழுப்பிய முன்னாள் பெல்டா தலைமை இயக்குநர் சுல்கிப்லி அப்துல் வஹாப் எழுப்பியதாக குறிப்பிட்ட மஸ்லான், உத்தரவுக்குக் கீழ்ப்படிய மறுத்த காரணத்துக்காக அவர் வெளியேற்றப்பட்டதாகச் சொன்னார்.

“அது சட்டப்பூர்வமான கேள்வியாகும். பெல்டா தலைமை நிறுவனமாகும். ஆனால் அதன் துணை நிறுவனம் பங்குப் பட்டியலில் இடம் பெறவிருக்கிறது. அத்துடன் Koperasi Permodalan Felda Bhd என்னும் கூட்டுறவுக் கழகத்தின் சொத்துக்களும்  FGV-உடன் இணைத்துக் கொள்ளப்படவிருக்கின்றன.”

“அந்தக் கேள்விக்கு இதுவரை துணை அமைச்சர் அகமட் மஸ்லான், பெல்டா தலைவர் ஈசா சாமாட், பெல்டாவுக்கு பொறுப்பாக உள்ள பிரதமர் ஆகியோர் இது வரை பதில் தரவில்லை,” என்றார் அவர்.

TAGS: