மகாதீர் அவர்களே, அதற்கு நீங்கள் காரணம் இல்லை என்றால் வேறு யார் மீது பழி போடுவது?

“புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு 40 ஆண்டுகள் முடிந்தும் வருமான வேறுபாடுகள் நிலவுவதாக அவர் சொல்கிறார். அதற்கு அந்த டாக்டர்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர வேறு யாருமில்லை.”

டாக்டர் மகாதீர்: இன அடிப்படைக் கொள்கைகளைக் கைவிடுவது கலவரங்களுக்கு வழி கோலி விடும்.

கலா: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் அவர்களே, அந்த நிலைக்கு நீங்கள் உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும். அம்னோ தலைமையிலான பிஎன் ஆட்சியில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டும் மலாய்க்காரர்களுக்கு உதவ தாம் போதுமான அளவுக்குச் செய்யவில்லை என அவர் சொல்கிறார். அத்தகைய கொள்கைகளை கைவிடுவது இனக் கலவரங்களுக்கு வழி வகுக்கும் என்றும் அவர் கருதுகிறார்.

இங்கு எழுப்பப்பட வேண்டிய கேள்வி இதுதான்: உயர் கல்வி நிலையில் மலாய்க்காரர்கள் அதிகம் சேர்க்கப்படவில்லையா? பல்வேறு துறைகளில் மலாய்க்காரர்கள் தொழில் நிபுணர்களாக பணியாற்றவில்லையா? அரசாங்கச் சேவையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தவில்லையா? கணிசமான அளவுக்கு அவர்கள் அரசாங்கக் குத்தகைகளைப் பெறவில்லையா? (அவை டெண்டர் மூலம் விடப்படவில்லை என்றாலும்).

புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்டு 40 ஆண்டுகள் முடிந்தும் வருமான வேறுபாடுகள் நிலவுவதாக அவர் சொல்கிறார். அதற்கு அந்த டாக்டர்தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர வேறு யாருமில்லை.

ஹாங் பாயூப்: தாங்கள் பாதிக்கப்பட்டதாக கற்பனை செய்து கொண்டு மற்றவர்களை அச்சுறுத்துகின்றவர்களுக்கு வழங்கப்படும் ‘முழுமையான’ அங்கீகாரமாக அந்தக் கருத்துக்கள் கருதப்பட வேண்டும். அது இல்லை என்றால் வேறு என்ன சொல்வது?

ஜிமினி கிரிக்கெட்: அந்த முதிய முன்னாள் பிரதமர் மலேசிய அரசியலில் தமது செல்வாக்கு நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசையில் தாம் உருவாக்கிய காலப் பெட்டகத்துக்குள் இன்னும் சிக்கிக் கொண்டுள்ளார்.

இந்த நாட்டில் பிஎன் அதிகார வர்க்கத்துக்கும் மற்ற மக்களுக்கும் இடையில்தான் பெரும் இடை வெளி நிலவுகிறது.  மஇகா அதிகார வர்க்கத்துக்கும் சாதாரண மக்களுக்கும் இடையிலும் அதே பெருத்த வேறுபாடுதான் காணப்படுகிறது. அந்த ஏழை மக்கள் தேர்தல் நேரத்தில் பிஎன் வழங்கும் பிச்சைக்கு அடிமையாகி விடுகின்றனர்.

மலாய்க்காரர்களிடையே நடுத்தர வர்க்கத்தினர் பெரும் அளவு உள்ளனர். ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள மலாய்க்காரர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் புதிய பொருளாதாரக் கொள்கையால் அவர்களுக்கு ஆதரவு அளிக்க முடியவில்லை.

சீனர்களுக்கு இடையில் வேறுபாடுகள் குறைந்து வருகின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சீனர்கள் பெரும் எண்ணிக்கையில் நாட்டை விட்டு வெளியேறுவதே அதற்குக் காரணம்.
 
ஏழ்மையில் உள்ள சீனர்களும் எஞ்சியுள்ள சீன நடுத்தர வர்க்கத்தினரும் எண்ணிக்கையில் மிகவும் குறைவு. அத்துடன் மலாய்க்காரர்களுடன் ஒப்பிடும் போது அவர்கள் எண்ணிக்கை மூன்றுக்கு ஒன்றுதான். அதனால் அவர்கள் கலகம் செய்ய விரும்ப மாட்டார்கள். ஆயுதப் படைகளில் மலாய்க்காரர்கள் ஆதிக்கம் செலுத்துவதை மறந்து விட வேண்டாம்.

ஆகவே யார் கலகம் செய்ய விரும்புவார்கள்?

இரண்டாம் தரப்பு: மக்கள் இனத்தைப் பற்றி மறந்து விட்டனர். என்றாலும் அந்த ஈவிரக்கமற்ற அந்த மனிதர் அதனை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். மக்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ள அவர்களுடைய இன உணர்வுகளைத் தூண்டி விடுகிறார்.

பெர்சே 2.0 பேரணி காட்டியது போல தேர்தல் ஊழலை ஆட்சேபிக்க அனைத்து இன மக்களும் ஒன்று கூடியுள்ளனர். என்றாலும் அந்த இனவாதி கலவரங்கள் பற்றிப் பேசி அச்சத்தை ஏற்படுத்த முயலுகிறார்.

அவரது கருத்துக்கு ஆதாரமே இல்லை. அம்னோவின் நடப்பு நிலையைத் தக்க வைத்துக் கொள்வதற்கு அவர் அச்சத்தை ஏற்படுத்த முயலுகிறார்.

TAGS: