ஹாடி பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும், அன்வார்

பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் 13வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருப்பதாக மலாய்மொழி நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், பக்காத்தான் ரக்யாட் அவ்வளவு எளிதில் அவரை விட்டு விடாது.

மாற்றரசுக் கட்சித் தலைவரான அன்வார் இப்ராகிம், பக்காத்தான் ரக்யாட்டில் அப்துல் ஹாடி “முக்கிய பங்காற்றி வருபவர்” என்றும் அக்கூட்டணி இன்றைய நிலையை அடைந்திருப்பதற்கு அவர் பெரிதும் உதவியுள்ளார் என்றும் கூறினார்.

டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகிய மூன்று கட்சிகள் கொண்ட அக்கூட்டணி 2008 பொதுத் தேர்தலில் ஐந்து மாநிலங்களை பிஎன்னிடமிருந்து கைப்பற்றியது.பின்னர்,மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டணியிலிருந்து வெளியேறியதை அடுத்து பேராக் மாநிலத்தை அது இழக்க நேர்ந்தது. 

ஹாடி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது அவசியம் என்று பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் குறிப்பிட்டார்.

“விரைவில் அவரைச் சந்தித்து இதை வலியுறுத்துவேன்”, என்றாரவர். சினார் ஹரியானில் ஹாடி  தேர்தலில் போட்டியிட மாட்டார் என்று  வெளிவந்த செய்தியின் தொடர்பில் அன்வார் இவ்வாறு கருத்துரைத்தார்.

“அவரது பங்களிப்பும் டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் போன்றோரின் பங்களிப்பும் கட்சிக்கு வரும் தேர்தலில் மிகவும் தேவைப்படுகிறது”, என்றவர் குறிப்பிட்டார்.

TAGS: