ஹசாரேவின் உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது!

லோக்பால் மசோதாவில் மக்கள் விரும்பும் அம்சங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனையடுத்து அண்ணா ஹசாரே இந்திய நேரப்படி இன்று காலை 10. 20 மணிக்கு தனது உண்ணாநோன்பு போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி அண்ணா ஹசாரே உண்ணாநோன்பை முடித்தார். இது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி என ஹசாரே ஆதரவாளர்கள் தெரிவித்தனர். உண்ணாநோன்பு முடிந்ததும் இசை கலைஞர்கள் மகிழ்ச்சி பொங்கிட பாடினர். ஹசாரே கை தட்டியபடி ரசித்தார்.

மக்கள் சக்தி மகத்தானது ஹசாரே பேச்சு

உண்ணாநோன்பு போராட்டத்தை முடித்து மேடையில் பேசிய ஹசாரே, “எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இளைஞர்கள் சக்தி இந்த போரட்டத்தில் சிறப்பு இடத்தை பிடித்தது. மக்கள் சக்தி நாடாளுமன்றத்தை விட பலமானது என்பதை நினைவுப்படுத்துகிறேன். நடந்து முடிந்திருக்கும் இந்த போராட்ட அணுகுமுறையில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் சட்ட ஒழுக்கத்துடன் நடந்திருக்கிறது. இது ஒரு சிறப்பான முன்னுதாரணம் ஆகும்”, என்றார்.