IGP என அழைக்கப்படும் தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் லண்டனில் இறந்து விட்டதாகக் கூறும் வதந்திகளை உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
பிரிட்டிஷ் போலீசாருடன் சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ விவகாரங்களுக்காக இஸ்மாயில் லண்டனுக்கு சென்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவர் பிப்ரவரி 2ம் தேதி மலேசியாவுக்குத் திரும்புவார் என அவர் சொன்னார்.
“நான் அந்த வதந்திகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். நமது மக்கள், நாடு ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமையை மேற்கொண்டு அவர் வெளிநாடு சென்றுள்ளார்.”
பிரிட்டனில் உள்ள எம்15, எம்16 வேவு நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை விரிவு செய்து கொள்ளும் பொருட்டு இஸ்மாயில் லண்டனுக்கு சென்றுள்ளதாகவும் ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
அம்னோ உதவித் தலைவரும் செம்புரோங் அம்னோ தொகுதித் தலைவருமான அவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 56 பேருக்கு SPNB என்ற தேசிய வீடமைப்பு நிறுவனம் கட்டிய வீடுகளை வழங்கிய போது உள்துறை அமைச்சர் பேசினார். அந்த நிகழ்வில் SPNB தலைவர் இட்ரிஸ் ஹரோனும் உடனிருந்தார்.
அந்த வதந்திகளை மறுத்து அரச மலேசியப் போலீஸும் தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த வதந்திகளை பரப்புவதின் மூலம் அதனைச் செய்கின்றவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது என்றும் ஹிஷாமுடின் வினவினார்.
வலைப்பதிவுகளிலும் முக நூலிலும் டிவிட்டரிலும் வெளியாகின்ற உறுதி செய்யப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் அவர் பொது மக்களுக்கு அறிவுரை கூறினார்.