டிஏபி: புதிய நெடுஞ்சாலைக்கான செலவுகள் ஏன் 134 விழுக்காடு கூடின ?

உத்தேச மேற்குக் கடலோர துரித நெடுஞ்சாலைக்கான செலவுகள் 3.015 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து 7.07 பில்லியன் ரிங்கிட்டாக கூடியதை அரசாங்கம் விளக்க வேண்டும் என டிஏபி கோரியுள்ளது.

215.8 கிலோமீட்டர் நீளமுள்ள அந்தச் சாலையை 3.015 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டுவதற்கான உடன்பாடு ஒன்றில் Kumpulan Europlus Bhd (Keuro)வும் அதன் துணை நிறுவனமான Konsortiuum LPB Sdn Bhd (KLPB)ம் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசாங்கத்துடன் கையெழுத்திட்டன.

“நான்கு ஆண்டுகள் தாமத்திற்குப் பின்னர் இரு தரப்புக்கும் இடையில் பல முறை பேச்சு நடத்தப்பட்ட பின்னர் கட்டுமானச் செலவு 134.5 விழுக்காட்டு கூடி 7.07 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்திருப்பது முழுக்க முழுக்க அதிர்ச்சி அளிக்கிறது,” என டிஏபி தேசிய பிரச்சாரப் பிரிவுத் தலைவர் டோனி புவா ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சலுகைக் காலமும் 33 ஆண்டுகளிலிருந்து இரு மடங்கு உயர்த்தப்பட்டு 60 ஆண்டுகளாகியுள்ளது.

“அரசாங்கம் அது மட்டுமின்றி மேற்குக் கடலோர துரித நெடுஞ்சாலைக்கு 4 விழுக்காட்டு வட்டியில்  2.24 பில்லியன் ரிங்கிட் கடனையும் வழங்குகிறது.  வர்த்தகக் கடன்களுக்கு 22 ஆண்டுகளுக்கு 3 விழுக்காடு வட்டி உதவித் தொகையையும் அது கொடுக்கிறது.”

நிலத்தை கையகப்படுத்துவதற்கு ஏற்படும் 980 மில்லியன் ரிங்கிட் செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்கிறது எனவும் புவா கூறிக் கொண்டார்.

சிலாங்கூரில் உள்ள பந்திங்-கையும் பேராக்கில் உள்ள தைப்பிங்-கையும் அந்த துரித நெடுஞ்சாலை இணைக்கிறது.

செலவுகள் கூடியதற்கு அந்த நெடுஞ்சாலையின் தொலைவு 100 கிலோ மீட்டர் அதிகரிக்கப்பட்டு 316 கிலோ மீட்டராக உள்ளது எனக் காரணம் கூறினாலும் அந்தப் பாதை இன்னும் தைப்பிங்-கிற்கும் பந்திங்-கிற்கும் இடையிலானதாகும் என்றும் புவா குறிப்பிட்டார்.

“நீளம் கூடியிருப்பதை செலவுகள் 134 விழுக்காடு அதிகரித்துள்ளதை நியாயப்படுத்த முடியாது.”

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தாம் உண்மையில் வெளிப்படையானவர், பொது மக்களுக்குப் பொறுப்பேற்வர் என்பதைக் காட்டுவதற்காக அப்பட்டமாக கண்ணுக்குத் தெரியும் அந்த வேறுபாடுகளை விளக்க வேண்டும்.”

TAGS: