“நில மோசடி” குறித்த புலனாய்வுக்கு உதவ முன்னாள் பினாங்கு பிஎன் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் மறுத்தனர்

“பினாங்கு மாநில அரசாங்கத்துக்கு பல மில்லியன் ரிங்கிட் செலவு வைத்த நில மோசடி எனக் கூறப்பட்ட ஒரு விவகாரம் மீதான விசாரணையில் ஒத்துழைக்க முன்னாள் பினாங்கு பிஎன் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தவறி விட்டனர். ‘

தான் ஹாக் ஜு ‘மோசடி’ என வருணிக்கப்பட்ட அதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்வதற்குக் கிடைத்த இரண்டு பொன்னான வாய்ப்புக்களை பிஎன் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டதாக துணை முதலமைச்சர் பி ராமசாமி கூறினார். அந்த ‘மோசடி’ பினாங்கு மக்களுக்கு 14.7 மில்லியன் ரிங்கிட் செலவை இழுத்து விட்டது என்றார் அவர்.

செபராங் பிராயில் கல் உடைப்பு நடவடிக்கைகளுக்காக நிலம் கோரி தாம் சமர்பித்த விண்ணப்பத்தை ஏற்கனவே அந்த நிலம் இரண்டு சங்கங்களுக்குச் சொந்தமானது எனக் காரணம் காட்டி மீட்டுக் கொண்டதற்காக தான் 2005ம் ஆண்டு மாநில அரசாங்கம் மீது வழக்குத் தொடர்ந்தார்.

தெலுக் பாகாங் சட்டமன்ற உறுப்பினர் ஹில்மி யாஹ்யா தவிர மற்ற மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்கள் யாரும் பக்காத்தான் அரசாங்கம் 2008ல் தொடங்கிய விசாரணையில் பங்கு கொள்ள மறுத்தாக ராமசாமி மேலும் கூறினார்.

ஹில்மி அப்போது கெரக்கான் தலைமையிலான மாநில அரசில் துணை முதலமைச்சராக பணியாற்றினார்.

“அவர்களை விசாரிப்பதற்காக விசாரணையில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் அவர்கள் அழைக்கவில்லை. என்ன தவறு நிகழ்ந்தது என்பதைக் கண்டு பிடிப்பதில் அவர்களுடைய உதவியை நாடுவதற்காகவே அவர்களை வருமாறு கேட்டுக் கொண்டோம்,” என அவர் இன்று நிருபர்களிடம் கூறினார்.

“நாங்கள் அரசியல் விளையாடுவதாக கூறி அவர்கள் வர மறுத்து விட்டனர்,” என்றார் அவர்.

கொம்தாரில் நிகழ்ந்த நிருபர்கள் சந்திப்பின் போது ராமசாமியுடன் முதலமைச்சர் லிம் குவான் எங்-கும் இருந்தார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த விவகாரம் மீது வெள்ளை அறிக்கை ஒன்றை ராமசாமி சமர்பித்தார். அந்த விஷயம் மீது மாநில அரசாங்கம் மன்னிப்புக் கேட்பதற்கு எதுவுமில்லை எனக் கூறிய அவர் அதற்கு பிஎன் நிர்வாகமே பொறுப்பு எனச் சொன்னார்.

ஏற்கனவே கோரப்பட்டது போல அந்த வணிகருக்கு 1.8 மில்லியன் ரிங்கிட்டை இழப்பீடாக கொடுத்திருந்தால் பிஎன் அந்த ‘ஊழலிருந்து’ தன்னை காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும் என்றும் ராமசாமி குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்திருந்தால் 40 மில்லியன் ரிங்கிட் சட்டக் கோரிக்கையை அந்த வணிகர் தொடரும் நிலை ஏற்பட்டிருக்காது.

முன்னாள் பினாங்கு ஆட்சி மன்ற உறுப்பினரும் பிஎன் பணிக்குழுவின் நடப்புத் தலைவருமான டாக்டர் தெங் ஹொக் நான், அந்த விவகாரத்தை ஊழல் என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் பக்காத்தான் அரசாங்கம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் தனது அறிக்கையை மீட்டுக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1.8 மில்லியன் இழப்பீடு பற்றிக் குறிப்பிட்ட தெங், பணத்தைச் செலுத்துவதற்கு முன்னர் முறையான ஆவணங்களைப் பெறுவதற்கு அரசாங்கம் காத்திருந்ததாக சொன்னார். ஆனால் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றார்.

இதனிடையே 2008ம் ஆண்டுக்கு முன்பு தான் ஆட்சியில் இருந்த காலத்தில் அந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது பிஎன் நிர்வாகம் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று லிம் வினவினார். 

“அவருக்கு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டது. நாங்கள் அரசாங்கத்தை ஏற்ற பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. நாங்கள் அவரை இன்னொரு பிரிவுக்கு மாற்றினோம்.”

“நாங்கள் ஒரு நபர் மீது இரண்டு முறை நடவடிக்கை எடுக்க முடியாது.  அது இரட்டை ஆபத்தாகும். நாங்கள் இப்போது அவரைத் தொட முடியாது. பிஎன் -னுக்கு நன்றி,” என்றார் அவர்.

தான் ஹாக் ஜு-வுக்கு இழப்பீடாக 500,000 ரிங்கிட் கொடுத்தால் போதும் என்று முறையீட்டு நீதிமன்றம் செய்த முடிவை எதிர்த்து தான் மேல் முறையீடு செய்து கொண்டுள்ளார் என டிஏபி தலைமைச் செயலாளருமான லிம் தெரிவித்தார்.

தமக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 14.7 மில்லியன் ரிங்கிட் இழப்பீட்டைத் திருப்பிக் கொடுக்குமாறும் தானுக்கு நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. ஆனால் அவர் அந்தத் தொகையைத் திருப்பிக் கொடுக்கும் சாத்தியமில்லை என்றும் லிம் குறிப்பிட்டார்.

“ஆகவே நாங்கள் அந்த வழக்கில் தோல்வி கண்டால் பிஎன் -னும் தெங்-கும் தானுக்கு 40 மில்லியன் ரிங்கிட் கொடுப்பார்களா ? நாங்கள் வெற்றி பெற்றால் பிஎன் -னும் தெங்-கும் அந்த 14.7 மில்லியன் ரிங்கிட்டை திருப்பிக் கொடுப்பார்களா ?” என்றும் அவர் வினவினார்.

TAGS: