வாக்காளர் பட்டியலில் ஐயத்துக்கிடமான 42,025 பெயர்கள் நீக்கம்

தேர்தல் ஆணையம்(இசி), வாக்காளர் பட்டியலில் உள்ள ஐயத்திற்டமான 42,025 பெயர்களை நீக்க முடிவு செய்துள்ளது. 42,051 பெயர்களை இரண்டு மாதங்கள் காட்சிக்கு வைத்ததில் 26வாக்காளர்களை மட்டுமே உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.எனவே, எஞ்சியுள்ள 42,025பெயர்களை நீக்குவதென முடிவு செய்யப்பட்டதாக இசி தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் தெரிவித்தார். 

“வழக்கமாக ஒரு மாதம்தான் பட்டியலைக் காட்சிக்கு வைப்போம்.நாடாளுமன்றத் தேர்வுக்குழு(பிஎஸ்சி) கேட்டுக்கொண்டதற்கிணங்க இரண்டு மாதம் காட்சிக்கு வைத்திருந்தோம்”, என்றாரவர். அப்துல் அசீஸ், பினாங்கு ஜார்ஜ்டவுனில், தேர்தல் அதிகாரிகளுக்கும் உதவி அதிகாரிகளுக்கும் ஒரு விளக்கக் கூட்டத்தைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

கடந்த ஆண்டு மூன்றாம் காலாண்டு முடிய நாடு முழுக்க இருந்த பதிவுசெய்த வாக்காளர் எண்ணிக்கை 12,400,437 என அவர் தெரிவித்தார்.

21 வயதை எட்டியவர்கள், அதைத் தாண்டியவர்கள் என்று பார்த்தால் அவர்களின் எண்ணிக்கை 16,131,571.இவர்களில் 3,731,134பேர், அதாவது வாக்காளராகும் தகுதி உள்ள 23 விழுக்காட்டினர் இன்னும் வாக்காளர்களாக பதிவு செய்யவில்லை.

புதிய இடங்களுக்கு மாறிச் சென்றவர்கள் தங்கள் புதிய முகவரிகளைத் தேசியப் பதிவுத்துறையில் பதிந்துகொண்டு இசி-யைத் தொடர்புகொள்ள வேண்டும் என்று அப்துல் அசீஸ் அறிவுறுத்தினார். இல்லையேல் வாக்களிப்பு மையங்கள் குறித்து குழப்பம் ஏற்படும்.

வெளிநாடுகளில்  வாக்களிப்புக்கு ஏற்பாடு செய்ய விஸ்மா புத்ரா ஆயத்தமாக இல்லை

வெளிநாடுவாழ் வாக்காளர்கள் வாக்களிக்க வசதி செய்து தரலாமே என்று கூறியதற்கு வெளிநாடுகளில் வாக்களிக்கும் ஏற்பாடுகளைச் செய்துகொடுக்க வெளியுறவு அமைச்சு தயாராக இல்லை என்றார்.

“வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர் எண்ணிக்கை பெரிது. அவர்கள் பல இடங்களில் வசிக்கிறார்கள்”, என்றார்.

ஊராட்சித் தேர்தல்கள் நடத்துமாறு பினாங்கு அரசு வேண்டுகோள் விடுத்திருப்பது பற்றிக் குறிப்பிட்ட அப்துல் அசீஸ், அது தொடர்பான சட்டங்கள் இரத்துச் செய்யப்பட்டுவிட்டதால் அந்தத் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் இசி இல்லை என்றார். அதை முதலமைச்சர் லிம் குவான் எங்குக்குத் தெரியப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால், மாநில அரசே அதைச் செய்யலாம் என்றாரவர். ஒரு மாநில அரசு  கிராமத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்ததுபோல் பினாங்கு அரசும் இசி சம்பந்தப்படாமல் ஊராட்சித் தேர்தல்களை நடத்திடலாம்.

-பெர்னாமா

TAGS: