அன்வார்: தேர்தல் ஆணையம் சிறிய விஷயங்களில் நேரத்தை வீணாக்கக் கூடாது

இசி என்ற தேர்தல் ஆணையம் சிறிய, நடைமுறை விஷயங்கள் மீது நேரத்தை வீணாக்குவதை நிறுத்திக் கொண்டு தேர்தல் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

“தேர்தல் ஆணையத்தின் பெரிய கடமை தேர்தலை தூய்மைப்படுத்துவதாகும். அது வாக்காளர் பட்டியலைச் சுத்தப்படுத்த வேண்டும். நேர்மையான தேர்தல்களை உறுதி செய்ய வேண்டும். ஊடகங்களில் சம நிலையான வாய்ப்புக்கள்  கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும்,” என வாங்சா மாஜுவில் அன்வார் நிருபர்களிடம் கூறினார்.

“இசி அத்தகைய பழைய நடைமுறை விவகாரங்களை பற்றி மட்டும் அதிகம் கவலைப்படக் கூடாது. அது மக்கள் கவனத்தைத் திசை திருப்புவதாகும்,” என அன்வார் சொன்னார்.

தேர்தல் வேட்பாளர் நியமன நாளின் போது ஊர்வலங்களை நடத்தும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இசி நடவடிக்கை எடுக்கக் கூடும் என தி ஸ்டார் நாளேடு வெளியிட்டுள்ள செய்தி பற்றி அன்வார் கருத்துரைத்தார்.

தேர்தல் சீர்திருத்தங்கள் மீதான நாடாளுமன்றத் தேர்வுக் குழு வழங்கிய பரிந்துரைகளை அமலாக்காமல் சாக்குப் போக்கு சொல்லிக் கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் அண்மைய நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளுக்கு கவலை அளித்துள்ளன. பிஎன் தலைமையிலான கூட்டரசு அரசாங்கத்துக்கு ஆதரவாக இசி செயல்படுகிறது என்றும் தேர்தல் சீர்திருத்தங்களைத் தாமதப்படுத்துவதற்கு காரணங்களை சொல்லிக் கொண்டிருக்கிறது என்றும் அவை கருதுகின்றன.